Saturday 18 August 2012

சிறுமை அணியுமாம் தன்னை வியந்து! என் செய்ய?பகுதி 2

சென்ற 5.8.2012 ஞாயிற்றுக்கிழமை தினக் குரல் நாளிதழில் வெளியான எனது கட்டுரையின் (1) முதல் பகுதியைப் பதித்திருந்தேன். அதன் தொடர்ச்சி சென்ற 12.8.2012 ஞாயிற்றுக்கிழமை தினக் குரல் நாளிதழில் வெளியான (2) இரண்டாம் பகுதிதான் இது...

தலைப்பு : "சிறுமை அணியுமாம் தன்னை வியந்து! என் செய்ய?"
(பகுதி 2)


தமிழர்கள் இருக்கும் மலேசியா, சிங்கை, இலங்கை மேற்கத்திய நாடுகள் மற்றும் தமிழகம் போன்ற ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரியான சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. இதனை ஒருங்கிணைத்து சரியாக வழிகாட்டிச் செல்லவேண்டுமென்ற தலைமை எங்கே உள்ளது? மிகுந்த ஆர்வம்கொண்ட தமிழ்நெறியாளர்கள் தமிழ்ப் பேரியக்கங்களில் இங்கே இருக்கிறார்கள். அவர்களாவது ஏதாவது செய்யலாமே! சின்னச் சின்ன இயக்கங்களும், ஆர்வலர்களும் துணை நிற்பார்கள் என்பது உறுதி. அதை அரசியல் ரீதியில் அங்கீகரிக்க தலைவர்களும் ஆவண செய்ய வேண்டும்! மேடை கிடைத்ததற்காகப் பேசிவிட்டுச் சென்றால் மட்டும் போதாது!

எஃப்.எம் (FM) என்பதற்கு 'பண்பலை' என்று மலேசியத் தமிழர்கள்தான் முன்மொழிந்தார்கள். ஆனால் இன்று அந்தப் பண்பலை, 'எஃப்.எம்' ஆனது யாரால்? இதற்கும் மக்களுக்கும் என்ன தொடர்பு? எனவே, மக்களை, நேயர்களை ஒதுக்கிய நிலையில் சில காரியங்கள் நடக்கின்றன! இதற்கு யார் பொறுப்பு?


நிறைய தமிழ்ச் சொற்கள் சமஸ்கிருதம் என்ற மயக்கத்தில் தமிழில் இருக்கின்றன. 'சலம்' என்ற சொல் அப்பரால் தேவாரத்தில் பயன் படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்தச்சொல் 'ஜலம்' என்ற சொல்லில் இருந்து வந்ததாகச் சில மேதாவிகள் சொல்லி வருகிறார்கள்.


தமிழ் என்பது மூவெழுத்துகளால் இயன்று, தமிழ்ச் சொற்களின் எழுத்-

தெண்ணிக்கையைக் குறிப்பாய் உணர்த்துகிறது. தமிழ்ச்சொற்கள் ஓரெழுத்து ஒரு மொழி, ஈரெழுத்து ஒரு மொழி, தொடர்மொழி என மூவகைப்படும் என்பது அறிந்ததே. தொடர்மொழி என்பது மூவெழுத்து மொழியினையும், நான்கெழுத்து மொழியினையும் குறிக்கும்தானே? நான்கெழுத்து மொழி பெரும்பாலும் உகர ஈற்றதாய்த் திகழும் - கணக்கு, வழக்கு (எண் - எழுத்து) என்பன அதற்குச் சான்றுகளாகும். நெடிற்றொடர் ஒழிந்த ஐந்து குற்றுகர ஈற்றுத்தொடர் மொழிகளும் மூவெழுத்து மொழிகளே. இலக்கணம், இலக்கியம் இரண்டும் நான்கெழுத்தெனும் வரையறையை மீறியுள்ளனவேயெனில், அவை தமிழ்ச் சொற்கள் அல்ல; வடச் சொற்கள். லட்சியம் (இலட்சியம்), லட்சணம் (இலட்சணம்) எனும் சமஸ்கிருதச் சொற்களின் தற்பவமாகும். அவற்றைத் தமிழ் எனக் கருதிச் சிலர் வலிந்து தரும் விளக்கங்கள் ஏற்புடையனவல்ல!

ஆனால், நாம் எல்லோரும்... (தமிழ் அருவிகள் என்றும், தமிழ்க் காப்பாளர்கள் என்றும், தனித்தமிழ் இயக்கம் என்றும், தமிழ்நெறி உணர்வாளர்கள் என்றும் கூறிக்கொள்வோர் உட்பட) முழுமையாக மிகச்சிறந்த அப்பழுக்கில்லாத தமிழையா உரைக்கின்றோம்? சீர்மிகு தமிழையா எழுதுகின்றோம்? நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, அறியாமலோ, உணராமலோ பிழைகள் பல செய்கிறோம் - செய்தும் வருகிறோம்.


அவை ஒல்லாந்தர் (டச்சு), போர்த்துகேயர், ஆங்கிலேயர், சமஸ்கிருதம், வடச்சொல், அரபு, உருது என ஏதாவதொரு ரூபத்தில் மறைந்திருக்கின்றன. சமஸ்கிருதம் மக்கள் பேசாத மொழி. தமிழ், மக்களால் பேசப்படும் அற்புதமான மொழி. அதேநேரம் பல்வேறு இன, மொழி ஆட்சிக்கு உட்பட்டுவந்த மொழியும்கூட; அதனால் பல்வேறு பிறமொழி சொற்கள் தமிழை அண்டி வந்திருக்கலாம். அதுபோல, தமிழ்ச் சொற்கள் அவர்கள் மொழியிலும் கலந்திருக்கலாம். உருது சொல்லான 'ராவுத்தர்' என்ற வார்த்தையை அன்றே முருகனடியாரான 'குமரகுருபரர்' தன் பாடலில் குறிப்பிட்டிருக்கிறார். 'பரவாயில்லை' என்று சர்வசாதாரணமாகச் சொல்கிறோம்! ஆனால், அது தமிழ்ச்சொல் கிடையாது, உருதுச்சொல் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?


'சாதாரண' மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கே ஒரு போராட்டம் செய்ய வேண்டிய நிலையில் இருக்க, மொழியில் பிறமொழி சொற்கள் கலந்ததை அல்லது கலந்திருப்பதை எவ்வாறு அறிவார்கள்? ஆரம்பப்பள்ளியில் படித்துக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கே இங்குப் பாடம் நடத்த வேண்டியிருக்கிறதே! அதே நிலையில்தான் தமிழ்ப்பத்திரிகையில் பணியாற்றும் பலரும் இருக்கிறார்கள். பத்திரிகையில் வேலை செய்துகொண்டே புனைப்பெயரில் எழுதி வாசகர்களைக் காயப்படுத்தும் 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று கூறும் நக்கீரர்கள் முதலில்

அவர்களைத் திருத்தட்டும்.

தினசரி தமிழால் பிழைப்பு நடத்தும் இவர்களுக்கே தமிழ் 'தண்ணி' காட்டுகிறதென்றால் சாதாரண, சாமானிய வாசகனுக்கு எப்படி? இதில் கதையில் அழுத்தம் இல்லை, ஆழம் இல்லை என்ற சொல்வேறு! இனி கதைகளில் ஆறு, கிணறு, குளம், குட்டை என்று சேர்த்து எழுதி இப்பொழுது கதைகள் ஆழமாக இருக்கிறதா என்றெல்லாம்
  கேட்கவேண்டுமோ! 
இப்பொழுது பிரசுரமாகும் கதைகள் எல்லாமே சிறந்த, ஆழமான கருத்தை வெளிப்படுத்தும் கதைகளா? பிரபல எழுத்தாளர்கள் முதல் என்னைபோன்ற சாதாரண கத்துக்குட்டி எழுத்தாளர்கள்வரை படைக்கும் படைப்புகள் எல்லாமே சிறந்த படைப்புகளா? விமர்சனம் என்று வந்துவிட்டால் பிரபலங்களின் படைப்புகளிலும் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டலாம்! ஆனால், அவர்களைப்பற்றிய 'ஆகா.. ஓகோ.. சூப்பர்' என்றுவரும் விமர்சனங்கள் மட்டுமே பொதுவாகப் பிரசுரமாகின்றன! தெளிவாக நான் எழுதி அனுப்பிய மிகப்பிரபல பழம்பெரும் எழுத்தாளரின் (முனைவர்) ஒரு சிறுகதைப் பற்றிய விமர்சனம் இருட்டடிப்பு செய்யப்பட்டது; இரு வாரங்களுக்குப்பிறகு அந்த ஞாயிறு பத்திரிகை பொறுப்பாசிரியர் என்னை அழைத்து, 'உங்களுடைய விமர்சனம் சரிதான் பாலன், ஆனால் அவர் எங்களுக்கு வேண்டியவர், அதனால் பிரசுரிக்கவில்லை' என்றார். இது எப்படி இருக்கிறது! மற்ற வாசகர்களின் விமர்சனங்கள் மட்டும் தாறுமாறாக வரலாம், பிரபலங்களின் விமர்சனங்கள் மட்டும் கூடாதாம்?

தொடரும்...3)

No comments:

Post a Comment