Friday 12 October 2012

சிறுகதை : 'பொந்தியானாக் புன்னகை!'

சிறுகதை : 'பொந்தியானாக் புன்னகை!'

இருள் கப்பிக் கொண்ட இரவு பதினொரு மணி.  சலசலத்துப் பெய்து கொண்டிருந்த மழை, வீதியில் ஆட்களை நடமாட விடவில்லை.  சாலையோரத்து 'சோடியம்' விளக்குகள் சோகமாக ஒளி சிந்த, இடி இடித்து மின்னல் தெறித்துக் கொண்டிருந்தது!

அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அசைந்து அசைந்து துடைத்து விடும் 'வைப்பரின்' துணையோடு சாலையில் பெருகி ஓடிய மழை நீரை கிழித்துக்கொண்டு அந்த நீல நிற 'புரோட்டோன் வீரா' பறந்து கொண்டிருந்தது.

அந்தக் 'காரி'னுள் மூன்று பேர்; கணேஷ், மதுமிதா மற்றும் அவர்களின் அன்பான தாம்பத்தியத்தின் அடையாளமான ஒரு வயது நிஷா.

மறுநாள் காலை நடைபெற இருந்த உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் சரியான நேரத்திற்குப் போய்ச் சேர்ந்துவிட முடியுமா என்ற கவலையோடு கணேஷ் சாலையில் கண் பதித்திருந்தான்.  மதுமிதாவின் மடியிலிருந்த குழந்தை நிஷா, அம்மா முகம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்ததை அடிக்கடி கடந்துசெல்லும் சாலையோர விளக்குகளின் வெளிச்சத்தில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

ஏனென்று புரிந்துகொள்ள முடியாமல் கணேஷின் மனதில் ஏதேதோ சிந்தனைகள் தறிக்கெட்டு ஓடிக்கொண்டிருந்தது!

'ஏன்?  என்னவாயிற்று எனக்கு?  எந்தக் காரணமும் இல்லாமல் எதற்கு என்னுள் குழப்பம்?'  இன்னும் குழம்பியவனாக காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.  ஏதோ ஒரு துஷ்ட சக்தி தன்னைப் பிசைந்து கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது!

அவனது மனக் குழப்பத்தை வாசித்து விட்டவளாக மதுமிதா கேட்டாள்... "ஏங்க!  ஒரு மாதிரியா இருக்கீங்க?"

கணேஷ் ஒரு கையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு பின்இருக்கையில் அமர்ந்திருந்த அவளைத் திரும்பிப் பார்த்தான்.  அப்படியே ஓரமாய் காரை நிறுத்திவிட்டு, பரிவாக அவளது தலைமுடியைக் கோதிவிட வேண்டுமென்ற எண்ணம் வந்தது.  குழந்தை நிஷாவை முத்தமிட வேண்டுமென்ற ஆசை வந்தது.

"ஒண்ணுமில்லை" என்றான்.

"பொய் சொல்றீங்க.  உங்க முகத்தில் வழக்கமாக இருக்கிற சந்தோஷத்தைக் காணோம்."

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த கணேஷ், "ஏன்னு தெரியல மது, ஏதோ நெஞ்சை அடைக்கிற மாதிரி இருக்கு.  ஏதோ ஒரு சக்தி என்னைப் போட்டு அமுக்குற மாதிரி இருக்கு..."

மதுமிதா பயந்து போனாள்!  "உடம்பு சரியில்லைன்னா திரும்பிப் போயிடலாங்க, கல்யாணத்துக்குப் போகவேண்டாம்!"

"ச்சே... உடம்புக்கு ஒண்ணுமில்லை... மனசுதான் ஏதோ செய்யுது..."

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே கார் ஈப்போ நகர எல்லையை விட்டு பினாங்கை நோக்கி வெகுதூரம் வந்துவிட்டது.

சாலையில் விளக்குகள் இல்லாத இருட்டு.  எதிரில் வந்த வாகனங்களின் 'ஹெட் லைட்டுகள்' மட்டும் அவ்வப்பொழுது பளிச்சிட்டுக் கொண்டிருந்தன.  மழை நின்றபாடில்லை!

'இந்தப் பயணத்திற்குப் பழைய சாலையை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாமே' என்று நினைத்த கணேஷ், மணியைப் பார்த்தான்.  ஏறக்குறைய ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்போதுதான் அவனுக்கு மறந்திருந்த 'அந்த' விஷயம் சட்'டென்று ஞாபகத்திற்கு வந்தது!  இன்னும் சற்று நேரத்தில் பிரசித்திபெற்ற 'பொந்தியானாக் டணல்' வந்துவிடும்!

அந்த நினைப்பு அவன் அடிவயிறை சில்லிட வைத்தது!

பின்னால் திரும்பி, "இன்னும் கொஞ்ச நேரத்தில் 'அது' வந்திடும்" என்றான் கணேஷ்.

"எதைச் சொல்றீங்க?"

"இல்ல... இன்னும் பத்து நிமிடத்துல ஒரு பழைய 'டணல்' வரும். ஏறக்குறைய ஐம்பது மீட்டர் நீளம்.  பெரும்பாலும் விளக்கே இருக்காது, இருட்டா இருக்கும்."

"இருக்கட்டுமே...நாம 'கார்'ல இல்ல போறோம்?"

"உனக்குத் தெரியாது மது... அந்த 'டணல்'ல 'பொந்தியானாக்' இருக்கிறதை நிறையப் பேர் பார்த்திருக்காங்க.  அகோரப் பசியோட சுத்திவர்ற 'பொந்தியானாக்' ஆம்பளைங்க கிடைச்சா அடிச்சி, ரத்தத்தை உறிஞ்சிடுமாம்.  அதுங்கதான் 'டணல்'ல எரியுற விளக்கை எல்லாம் அடிக்கடி எரியாம ஆக்கிடுமாம்!  என்னோட கூட்டாளிங்க இதைப் பத்தி நிறைய சொல்லியிருக்காங்க..."

கணேஷ் இப்படிச் சொன்னதும், மதுமிதா பளீர் என சிரித்தாள்.  அந்தச் சிரிப்பு அவனது ரத்தத்தில் 'ஐஸ்' கட்டிகளை ஏற்றியது!

"என்னங்க நீங்க... நாட்டிலேயே 'நம்பர் ஒன் ஃப்புட்பால் பிளேயர்' நீங்க.  பல பேர் உங்களைப் பார்த்து பயப்படறாங்க.  நீங்களோ பார்க்காத 'பொந்தியானாக்'கை நினைச்சு பயந்துக்கிட்டிருக்கீங்க..." என்றாள் கிண்டலாக.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே 'கார்' மெல்ல...மெல்ல... 'அந்த' இருட்டுக் குகையை நெருங்கிக் கொண்டிருந்தது!  மழையின் சீற்றம் குறைந்தபாடில்லை.

குழந்தை நிஷா ஆழ்ந்து உறங்கி விட்டிருந்தாள்.

'காரின் ஹெட் லைட்' வெளிச்சத்தில் 'டணலின்' முகப்பு தெரிய ஆரம்பித்தது!

கணேஷின் மனதில் ஏதோ ஒரு குரல், 'திரும்பிப் போ... திரும்பிப் போ' என்று அலறியது!

'போகலாமா?.. வேண்டாமா?..' மனப் போராட்டத்தோடு கணேஷ் கொஞ்சம் கொஞ்சமாக, மெதுவாக 'காரை டணலு'க்குள் செலுத்திக் கொண்டிருந்தான்!

சுமார் இருபது மீட்டர் தூரம் போயிருக்கும்.

ஏதோ ஒரு விசையால் பிடித்து இழுத்து நிறுத்தப்பட்ட மாதிரி, 'கார்' படக்'கென நின்றது!  கணேஷின் மூளைவரை ஒரு சில்லிப்பு சர்ர்ரென பாய்ந்தது!  அவசரமாக சாவியைத் திருகினான்.

'க்க்க்கும்...க்க்க்கும்...' 'கார்' கிளம்ப மறுத்து முரண்டியது.  'ஹெட் லைட்'டும் அணைந்துபோக, 'காரை'ச் சுற்றி கனத்த இருள்!

மதுமிதா, "என்னங்க ஆச்சு?" என்றாள் படபடப்பாக!

"தெரியல மது, 'கார்' மறுபடியும் 'ஸ்டார்ட்' ஆக மாட்டேங்குது" என்றவன் ஒரு நிமிடம் யோசித்து, "நீ குழந்தையை பார்த்துக்க, நான் 'காரை' கொஞ்சம் 'செக்' செஞ்சுக்கிறேன்..." என்று சொல்லிவிட்டு, 'டார்ச் லைட்'டுடன் கதவு திறந்து வெளியே வந்தான்.

ஏதோ ஒரு பூ'வின் மயக்க வாசம் அவன் நாசிகளைத் தாக்கியது!  சுற்றிலும் பார்வையை சுழலவிட்டபடி, முன் பக்கம் போய் 'போனட்'டை திறந்தான், குனிந்தான், மதுமிதாவின் பார்வையிலிருந்து மறைந்து போனான்!

'வீ....ல்ல்ல்...' என்று குழந்தை நிஷாவின் அழுகை குரல் பொங்கிக் கிளம்பியது!  ஒரு நிமிடம் திடுக்கிட்ட மதுமிதா இருளில் குழந்தையைப் பார்க்க முடியாமல் தடுமாறினாள்.  விழி திறக்காமல் குழந்தை வீறிட்டு அழுவதை தன் கைகளின் ஸ்பரிசத்தால் உணர்ந்தாள்!  'காங்கையின் காரணமாக அழுகிறதோ?...  எனக்கே உஷ்ணம் தாங்க முடியவில்லையே...' என நினைத்துக் கொண்டாள்.

எவ்வளவு சமாதானம் செய்தும், பாலூட்ட முற்பட்டும் அதன் அழுகை நிற்கவேயில்லை!  முன் பக்கம் 'போனட்'டில் குனிந்திருந்த கணேஷ் தலை நிமிரவேயில்லை!

ஒன்று...இரண்டு...மூன்று...பத்து நிமிடமாயிற்று.  கணேஷிடமிருந்து அரவமேயில்லை!  சட்டென்று பதற்றம் தொற்றிக் கொள்ள, 'என்னவாச்சு இவருக்கு?' என்று யோசித்தவள், கீழிறங்க முற்பட...

பின்னால் ஒரு 'காரின் ஹெட் லைட்' வெளிச்சம் உயிர் பெற்று, கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து, மெதுவாகி, தயங்கி திடீரென ஆவேசமாகி வேகமெடுத்தது!

மதுமிதா ஒன்றும் புரியாதவளாக அந்தக் 'காரை'ப் பார்த்தாள்.  அது ஒரு 'போலீஸ்  வாகனம்.  'டணலில்' இயக்கமுடியாமல் கிடக்கும் 'காரு'க்கு வந்து உதவாமல் பேயாய்ப் பறக்கும் போலீசின் நடவடிக்கையைக் கண்டு சினந்தாள் மதுமிதா!  உயிர் பதைக்கப் பறந்த 'போலீஸ் கார்' 'டணல்' முடிவைத் தாண்டி 'சடன் பிரேக்' போட்டு நின்றது.

மதுமிதா அதை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தாள் - கையில் வீறிட்டு அழும் குழந்தையுடன்!  'டணலி'னுள் வெப்பக் காற்றுவேறு வியர்வையை வெளிக்கொணர வைத்து அவளை சஞ்சலப்படுத்தியது!

நின்ற 'போலீஸ் காரிலிருந்து ஒரு உருவம் கையில் 'மெகாஃபோனோடு' காரின் ஜன்னல்வழி நீட்டியது, சக்திமிக்க விளக்கொளியைக் காட்டியபடி, பேசத் துவங்கியது.

"பெண்ணே... நாங்கள் போலீஸ்... நீ மிகப் பெரிய ஆபத்தில் இருக்கிறாய்!  நாங்கள் சொல்வதைக் கேள்!  உடனே உன் காரின் கதவைத் திறந்து குழந்தையை எடுத்துக்கொண்டு, திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்துவிடு..." மலாய் மொழியில் பதட்டமாய் ஒலித்தது அந்தக் குரல்!

மதுமிதாவிற்கு தான் ஆபத்திலிருப்பது புரிந்துவிட்டது!  பய உணர்வு உந்தித் தள்ள, கதவைத் திறந்து, குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு, போலீசை நோக்கி ஓடத் துவங்கினாள்.  அவர்களை மிக அருகில் நெருங்கும்போதுதான் ஞாபகம் வந்தது...  'கணேஷ்?..'

திரும்பிய அவளது கண்களில்...

நாலைந்து கறுப்பு 'பொந்தியானாக்'குகள் கணேஷின் தலையைப் பிய்த்து, சுவைக்கத் துவங்கியிருந்ததும், ஓரமாய் அவனது முண்டம் ரத்த வெள்ளத்தில் கிடப்பதும் பட்டுவிட...

"ஓ..ஓ..ஓ.." என்ற அலறலோடு மயங்கி சாய்ந்தாள் மதுமிதா!


                                     *** முற்றும் ***

No comments:

Post a Comment