Saturday, 18 August 2012

சிறுமை அணியுமாம் தன்னை வியந்து! என் செய்ய?பகுதி1

சென்ற 5.8.2012 ஞாயிற்றுக்கிழமை தினக் குரல் நாளிதழில் வெளியான எனது கட்டுரையின் (1) முதல் பகுதி...


தலைப்பு : "சிறுமை அணியுமாம் தன்னை வியந்து! என் செய்ய?"
பகுதி - 1 
 
"தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடைய மொழியாகும்
அன்பே அவனுடைய வழியாகும்"
என்றார் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள்.

அன்புவழி, இன்பவழியாய் - அகவழியாய்க் களவுவழியாய் மலர்ந்தது. காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுப்பட்ட இன்பத்தையே அவன் பொருளாய்க் கருதினான். அப்பொருளினையே ஓதுவதால் தமிழிற்கும் 'அகவாழ்வு' எனும் பொருள் உண்டாயிற்று. இம்மூன்றனையும் முறையே எழுத்து, சொல், பொருள் எனும் தலைப்புகளால் தொல்காப்பியர் ஓதினார். அதனால் தமிழன் அகவாழ்வு - பொருள்வாழ்வு என்றும் நிலைத்திருக்கிறது. அன்பு வாழ்விற்கு ஊறு நேரும்போது அவ் வன்பே வீரமாய் உருவெடுக்கிறது. இதுவும் செவியுற்றது, கண்ணுற்றது; இவையிரண்டின் வழி கருத்துற்றதன் அடிப்படையில்தான் அதன் மாதிரியைப் பின்பற்றி எழுதுகிறேன். இதில் தவறில்லை!


அந்த அடிப்படையில் தமிழனின் குணம் - இனமான உணர்வு மேலோங்கும் சமயம்; அவரவர் நிலையில் மாறுபடுகிறது, வேறுபடுகிறது என்பதுவும் உண்மை.


'சாதாரண வாசகர்கள்' என்ற நிலையில், அவர்கள் தமிழ் மொழியில் மற்ற மொழிச் சொற்களைக் கலக்காமல் எழுதுவதும், பேசுவதும், வெளிப்படுத்துவதும் என்பது சற்றுக் கடினம் என்பதைச் சில மேதாவிகள் இன்னும் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்ற தோரணையில்
நக்கீரர்களாகச் சிலர் செயல்படுகிறார்கள்.

அதைச்சொல்வதற்குமுன், அண்மையில் இங்கு ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன். நிகழ்ச்சிக்குப் பேச வந்த ஒருவர், வந்தவர்கள் முன்னிலையில் ஒருசிலரை நேரடியாக அவர்கள் எழுதி அனுப்பும் கவிதைகள், கட்டுரைகளின் தன்மையைத் தொட்டுப் பேசினார். அப்போதுதான்
  அவர்கள் இலட்சணம் எங்களுக்கும் தெரிந்தது என்றாலும் அந்த இடத்தில் அப்படி அவர்களைச் சொல்லி சிறுமைப் படுத்தியதில் நிச்சயமாக மனதளவில் நொந்து போயிருப்பார்கள் அல்லவா!

ஒருவர் பெயரைச்சொல்லி அவர், 'என்ன குப்பையை எழுதி அனுப்பினாலும் திருத்தி கவிதை என்று போடுகிறோம்' என்றார். மற்றவரை, 'நீங்கள் எழுதும் தொடர் கட்டுரையில் எவ்வளவு எழுத்துப் பிழைகள்; நீங்களுமா இப்படி?' என்றார். அவருடைய அந்தக் கருத்தில் நான் உடன்பட்டாலும், அடிக்கடி எழுதும் அவர்களுடன் தொடர்பு கொண்டு தனிப்பட்ட முறையில் அதைச்சொல்வதுதானே பண்பாடு!
  அல்லது, அந்தக் கலந்துரையாடலில் பொதுவாகத் தன் கருத்தைச் சொல்லி, 'இங்கு சம்பந்தப்பட்ட சிலரும் வந்துள்ளார்கள்; அவர்கள் கவனத்தில் கொள்ளட்டும்' என்ற அன்பான வேண்டுகோளை விடுத்து, 'பல காலமாக எழுதிவரும் உங்களை நீங்கள் பண்படுத்திக் கொள்ளாவிட்டால் உங்கள் படைப்புகள் பரிசீலனையில் வைக்கப்படும்' என்று சொல்லியிருந்தாலாவது அவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள். வாசகர்களின் கவனத்திற்கு, என தங்கள் பத்திரிகையிலும் விரிவாக, பொதுவாக எழுதலாம்தானே!

இனி நக்கீரர்களுக்கு நான் சொல்லவந்ததைச் சொல்கிறேன். பொதுவாகவே, பலரும் மேடைகளிலோ, சாதாரணமாகப் பேசும்பொழுதோ அல்லது கதைகள் எழுதும்போதும் கூட பிற மொழிச் சொற்கள் தட்டுப்படுவது இயல்பாகிவிட்டது. மொழியில் கலப்படம்
  என்பது தமிழில் மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் இருக்கிறது. உலகம் முழுவதும் பேசப்படும் ஆங்கிலம் - தனித்துவ மொழி அல்ல. பல்வேறு மொழிகளின் கூட்டு. ஏன்! நம் நாட்டின் தேசியமொழியிலிருந்து பிறமொழிச் சொற்களை எல்லாம் நீக்கிவிட்டால் அங்கு மிஞ்சியிருப்பது வெறும் Paku, Besi  போன்ற இன்னும் சில சொற்களேயாகும். மொழியில் கலப்படம் எவ்வாறு வருகிறது அல்லது வந்திருக்கிறது என்றால், அது பிற இனத்தவர்களால்தான். பிற இனத்தவர்களின் படையெடுப்பினால், குடியேற்றத்தால் மொழிகளில் பிற மொழிச்சொற்கள் கலந்தன.

சென்னையில் பேசப்படும் 'தமிழ்', சென்னையில் நெடுங்காலமாக குடியிருக்கின்ற ஆந்திர மாநிலத்தவர்களின் மொழியால் உருவானது. இலங்கையில் 'ஒல்லாந்தர்' (டச்சுக்காரர்கள்) மற்றும் 'போர்த்துகேயர்' ஆகிய நாட்டவர்களின் ஆட்சியினால் 'சப்பாத்து', 'கச்சேரி', 'சன்னல்' என பல சொற்கள் தமிழில் சேர்ந்தன. ஆங்கிலேயர் ஆட்சியின்போது, ஆங்கிலச் சொற்களான 'சினிமா', 'பஸ்',  'லீவு' போன்ற பலப்பல சொற்கள் தமிழாக மயங்கி நின்றன - நிற்கின்றன! தமிழைச்சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகளினால் ஆங்கிலம் மரியாதைக்குரிய மொழியாகவே இருந்தன. இந்தியை எதிர்ப்பதற்காக தமிழைக் கேடயமாக்காமல் ஆங்கிலத்தைக் கேடயமாக்கியதால் தமிழில் மேலும் ஆங்கிலச்சொற்கள் கலந்தன. இவை திராவிடர் கழக அரசின் ஆசீர்வாதத்தால் இன்றும் நடக்கிறது.


தி.மு.க குடும்பம் தொடங்கிய தொலைகாட்சி கேரளாவில், ஆந்திராவில் அந்தந்த மொழிச் சொற்களை முதல் சொல்லாகக் கொண்டிருக்க, தமிழில் மட்டும் 'சன் டிவி'. இதனை செம்மொழி மாநாடுகண்ட அன்றைய முதல்வர் கலைஞர் கண்டுகொள்ளவே இல்லை. ஆக, அங்கும் சரி, இங்கும் சரி, தமிழ் பலருக்கு அரசியல் மற்றும் சமூகத்
தொழிலுக்கு 'முதல்'ஆக இருக்கிறது. ஆக, தமிழில் கலப்படச் சொற்களுக்கு ஆட்சியில் அமர்ந்திருக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் காரணமாகிறார்கள். இல்லையெனில் இங்கும்கூட, முறையாக எழுதப்படாத அல்லது எழுத்துப்பிழைகள் மலிந்த சில தமிழ் நூல்கள் இன்று மாணவர்களின் பாடத்தேர்வுக்கு வழிகாட்டி நூலாக வந்திருக்க வாய்ப்பில்லை. ஓர் உதாரணம்,  'பி.எம்.ஆர்' கட்டுரைகள்' (படிவம் மூன்று) என்ற தலைப்பில் உள்ள நூல்! நாகரீகம் கருதி ஆசிரியர் மற்றும் பதிப்பாசிரியர் பற்றியத் தகவலை இங்கு வெளியிடவில்லை.

இன்றைக்கு தமிழகத் தொலைகாட்சிகளில் (மக்கள் தொலைக்காட்சி அல்ல) தமிழ் ஊறுகாய்போல் தொட்டுக் கொள்ளப்படுகிறது. கலப்பில்லாத தமிழில் தமிழகத்தில் பேசினாலோ, அல்லது இங்குள்ள சிலரிடம் பேசினாலோ - செவ்வாய்க் கிரகவாசியாகப் பார்க்கப்படுவதே உண்மை!


கலப்பில்லாத தமிழ் பேசுவது இன்பம். ஆனால் எங்கு பேசுவது? வேற்று கிரகத்திலா? அதனை வரவேற்கின்ற அரசும் தமிழ் நிலமும் எங்கு இருக்கிறது? மேடைகளில் தூய தமிழ் பேசுகிற தமிழகத் தலைவர்கள் முதல் இங்குள்ள தமிழ்நெறி உணர்வாளர்கள்
  உட்பட அவர்கள் இல்லங்களில் வேறு தமிழ் பேசுகிறார்கள். உண்மை இப்படி இருக்க, சாதாரண மக்களை, சாதாரண வாசகனை எப்படிப்பட்ட தமிழ் மொழிப் பற்றாளரும் குறை சொல்ல முடியாது. இதை யாரும் எழுதியோ, பேசியோ வெல்ல முடியாது! இதற்கு அறுவை சிகிச்சையும் நீண்டகால மருத்துவமும் தேவை. அதற்கு முறையான நிபுணத்துவ மருத்துவமனை வேண்டும். அந்த மருத்துவமனைதான் தமிழர்களுக்கென்று ஒரு அரசாங்கம் - நாடு! அல்லது சரியான, முறையான ஒரு இயக்கம் - பேரியக்கம்! அதனை யார் செய்வது? எங்கு தொடங்குவது என்பதே ஆய்வுக்குரியது.

நிலைமையும் உண்மையும் இவ்வாறு இருக்க, தப்பித் தவறிவாசகர்கள் அனுப்பும் படைப்புகளில் 'காப்பி'யடித்தல், வசூல், ரத்து, அசல், ராஜினாமா என்று இப்படி ஏதாவது சொற்கள் வந்துவிட்டால் அவை அரபுச்சொல்லா, உருதுச்சொல்லா, வடச்சொல்லா அல்லது ஆங்கிலச் சொல்லா என்பதை எத்தனை பேர் அறிவார்கள்?


அதைக் கண்டித்து பத்திரிகையில் வேலை செய்துகொண்டே புனைப் பெயரில் எழுதி, 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று அந்த வாசகர்களைக் காயப்படுத்துபவர்களை என்னவென்று சொல்வது?


மற்ற மொழிக்காரர்கள் (உதாரணத்திற்கு : ஆங்கிலம், மலாய்) அவர்கள் மொழியில் கலந்திருக்கும் பிறமொழிச் சொற்களைப்பற்றி அவர்கள் அலட்டிக்கொள்ளவில்லையே! நமக்கு மூன்று லட்சம் வார்த்தைகள் இருக்கிறது, நமக்குத் தேவையில்லை பிறமொழிச் சொற்கள் என்றால் பின் அதை முறையாகக் கொண்டுவருவது எப்படி?


அடுத்த தலைமுறைக்கு அதைக்கொண்டு செல்லவேண்டும். அதற்கு அடிப்படையில் ஆரம்பப்பள்ளியிலிருந்து ஆரம்பிக்கவேண்டும் அல்லவா! பூனைக்கு மணிக் கட்டுவது யார்?


பத்திரிகைகளுக்கு எழுதுபவர்களின் எண்ணிக்கையே குறைவு; இதில் இப்படிவேறு இடையூறு என்பது கூடாது! சொல்லவேண்டுமானால், நான் மேற்குறிப்பிட்டதுபோல பத்திரிகையிலேயே பொதுவானதொரு கட்டுரை எழுதி விளக்கலாம். என்றாலும், மாற்றுவதும், மாறுவதும் சிரமமான பணியே!


இங்குதான் ஒவ்வொருவரும், ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு பேச்சு
  பேசுகிறார்களே! அவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு என்கிறார்களே!  உதாரணத்திற்கு, 'கைத்தொலைப்பேசி' என்று மட்டும் சொல்லிவந்ததை கைப்பேசி', 'உலாப்பேசி', 'அலைப்பேசி' என்றும் சொல்கிறார்களே!

அதுபோல, 'ஃப்பேக்ஸ்' - என்ற சொல்லுக்குத் தமிழில் தொலை நகல், தொலைப்பதிவு, தொலை அச்சு, சாயை ஆகிய சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. இச்சொற்களில் ஓரளவு தமிழறிவு உள்ள மக்கள் எதைப் பயன்படுத்துவார்கள்? இதை - இந்தச் சொல்லை - பயன்படுத்துங்கள் என்று சொல்ல யார் இருக்கிறார்கள்?


'ஓ.. யானைக்கு கரி, களிறு, வேழம் என்று இன்னும் பல பெயர்கள் இருப்பதுபோல, இன்னும் பல சொற்கள் பலவற்றிற்கும் இருப்பதுபோல் இதுவும் இருந்துவிட்டுப் போகட்டுமே'  என எண்ணலாம்!  இருக்கட்டுமே; என்றாலும் புழக்கத்தில் இருப்பது 'யானை' என்ற சொல்தானே! இது வாசகர்களை மட்டுமா, தமிழ் பயிலும் மாணவர்களுக்கும் பெரும் சோதனையல்லவா? இங்கு ஆரம்பமே தகராறு, பிறகு எப்படி நல்ல தமிழ் வளரும்!


(தொடரும்...2)

No comments:

Post a Comment