பொருள் : உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை
நம் நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க இலாகாக்களிலும் உயர் அதிகாரிகள்
பொறுப்பில் அமர்ந்திருக்கும் இந்தியர்களின் விகிதாச்சாரம் படுமோசமாக
சரிந்துபோய் இருப்பது தினக் குரல் தொடர்ந்து
நமக்குத் தந்துகொண்டிருக்கும்
புள்ளி விபரங்களின்வழிதான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.
உள்துறை அமைச்சின் தலைமை இயக்குனரே அங்கு வேறு அலுவல் காரணமாகச்
செல்லும் இந்தியர்களிடம், 'யார் அந்த ஆசிரியர்? அவருக்கு எப்படி இப்படி ஒவ்வொரு
அரசாங்கத் துறைகளில் பணிபுரியும் உயர் அதிகாரிகளின் புள்ளி விபரங்கள்
தெரியவருகிறது என்று
துப்புத்துலக்க ஆரம்பித்துவிட்டார். தினக் குரல் ஆசிரியர்
சொல்வது அனைத்தும் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை
என்பதால், பயமில்லை! இதற்குமுன்பே 'சுடும் உண்மைகள்' வழி சுயமாக எழுதி
வந்த அவருக்குச் சில சோதனைகள் எழுதிவந்த பத்திரிகையிலேயே வந்தன.
வெளியிலிருந்தும் வந்தது! அதைத்தான் சென்ற ஞாயிறு 'அக்கம் பக்கம்' பகுதியில்,
'அழுதே இருக்கிறேன்' என பதில் அளித்துள்ளார்.
மிகவும் மென்மையான சுபாவம் கொண்ட அவருக்குள் அபரிமிதமான துணிச்சலும்,
ஆண்மைமிக்க எழுத்தாற்றலும் இருப்பதை 1997'லிருந்தே எனக்குத் தெரியும்.
அவரைத் தொடர்ந்து வருபவர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. இப்படி
தொழிலிலும், வெளியிலும் தனக்கு எந்தப் பாதிப்பு வந்தாலும் கொண்ட
கொள்கையை
விட்டுக்கொடுக்காமல் இருந்துவந்த அவருக்கு இன்று நல்லதொரு 'பீடம்' கிடைத்து
விட்டது. அதன்வழி, மக்களுக்காக மாறுபட்ட முன்பக்க செய்திகளையும், நல்லபல
தகவல்களையும், வாசகர்கள் பங்கெடுப்பதற்காக நிறைய புதிய அங்கங்கள், வாசகர்
கடிதங்களுக்கும் ஆசிரியர் தரும் விளக்கங்கள், கத்தரி படாமல் பிரசுரிக்கப்படும்
வாசகர் குரல்கள் என சிரத்தையுடன்
பல காரியங்களாற்றி வரும் அவருக்கு முதலில்
நாம் பாராட்டு தெரிவிக்கவேண்டும். ஏனென்றால், இப்பொழுது அவர் ஒரு
தனிக்காட்டு ராஜா'வாகத் திகழ்கிறார்.
இந்த நிலையில், இதுகாறும் அரசாங்க இலாகாக்களில் பணிபுரியும் இந்தியர்களின்
விகிதாச்சாரம் மனநிறைவளிக்கும் வகையில் இருக்கிறது என்று சொன்ன நமது
பொறுப்புமிக்கத் தலைவர்கள்(!?)
தினக் குரல் தந்த புள்ளி விபரங்களுக்கு வாய்மூடி
மௌனிகளாகவே இருக்கின்றனர். மேலும், ஆசிரியர் அவர்கள் எழுதும் எந்த ஒரு
முக்கியமான செய்தியைத்தொட்டும் பொதுவாகவே அதிகாரத்தில் இருக்கும் நம்
தலைவர்களும் சரி, மற்ற பொறுப்பாளர்களும் சரி, பதில் சொல்வதும் இல்லை,
'அவற்றிற்குத் தீர்வுகாணப்படும்' என்ற ஆறுதல் வார்த்தையும் காணோம்.
'மக்கள் நிம்மதியாக இல்லை' என்ற தலைப்பில் 26.7.2012 அன்று வந்த
'சுடும் உண்மைகள்'களை எத்தனைப்பேர் படித்திருப்பார்கள் என்பது தெரியாது!
படிக்கவேண்டிய கட்டுரை. பொதுவாகவே, ஞாயிற்றுக்கிழமை மட்டும்
தமிழ்ப்பத்திரிகைகள் வாங்கும் பழக்கம் நம் இந்தியர்களிடையே அதிகமாக
இருக்கிறது என்பது வேதனைக்குறிய செய்தி. வெளியில் தேநீர், சுவைநீர்
குடிப்பதற்கென்றும், புகை பிடிப்பதற்கும், மது அருந்துவதற்கும் செலவு
செய்யக்கூடிய பணத்தில் தினசரி ஒரு தமிழ்ப்பத்திரிகையை வாங்கிப் படிப்பதற்கு
என்ன சுணக்கம்? எல்லா பத்திரிகைகளுக்கும் விற்பனை அதிகம் ஏற்படுமல்லவா?
அங்கே நம் சகோதர சகோதரிகளுக்கு அதிகமாக வேலை வாய்ப்புகளும் சம்பள
உயர்வும் ஏற்படும் அல்லவா? விற்பனை அதிகம்
இல்லாமல் எப்படி பக்கங்கள்
பெருகும், எப்படி நிருபர்கள் அதிகரிப்பார்கள்? நாமே நம் பத்திரிகை உலகுக்கு
வேலை வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள, சம்பளத்தைப் பெருக்கிக்கொள்ள
முட்டுக்கட்டையாக இருக்கும்போது, 'வாய்ச்சொல் வீரனாக'மட்டும்
இருந்தென்ன பயன்?
சரி, விஷயத்திற்கு வருகிறேன். 'நாட்டில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை
குறைந்திருப்பதாக' உள்துறை அமைச்சர் முதல் போலீஸ் இன்ஸ்பெக்டர்
உள்பட போலீஸ் உயர் பதவிகளில் இருப்போரும் சொல்லிவருவதாக மேற்சொன்ன
'சுடும் உண்மைகள்' வழி ஆசிரியர் கூறியிருக்கிறார். அந்தத் தகவல் ஒரு
'வடிகடியஅண்டப்புளுகு' என்பதை மிகச்சரியான உண்மைகளுடன் அவர்
எழுதி
இருக்கிறார். மிக உயரிய பொறுப்பில் இருப்பவர்கள் மக்களுக்குத் தவறான
தகவல்களைத் தருவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்பதை சூசகமாக
எடுத்தியம்பியிருக்கிறார். 'போலீஸ் படையில் மட்டுமல்ல, அரசு
துறைகளிலும் ஆரவாரம்தான் அதிகமாக இருக்கிறது' என்று துணிச்சலுடன்
சொல்லியிருக்கிறார். "ஆசிரியரின் இந்த
வார்த்தை தன்னைக் கவர்ந்ததாக" உயர்
பதவியில், அதிகாரத்தில் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி நான் அவரிடம்
பேசும்பொழுது என்னிடம் சொன்னார். மேலும், அந்தச் சுடும் உண்மைகளில்
உள்ள செய்திகள் அத்தனையும் அப்பட்டமான உண்மை எனவும் சொன்னார்.
"அதுமட்டுமல்ல, பல காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட சுமார்
ஐயாயிரத்திற்கும் அதிகமானவர்களில்
என்னூறுக்கும் மேற்பட்டவர்கள்,
அதாவது சுமார் 16 விழுக்காட்டினர் நம் இந்திய சமுதாயத்தினர் என்பது வருத்தப்
படக்கூடிய பதிவு என்றார். எந்த இனத்தவரானாலும் கைது செய்த கொஞ்ச
நாளில் பெரும்பாலோர் வெளியே வந்துவிடக்கூடிய காட்சிதான் காணமுடிகிறது.
போலீசார் சற்று மூர்க்கத்தனமாக செயல்பட்டால் உடனே சமூக இயக்கங்கள்
முதல் மனித உரிமைக் கழகமான
சுஹாகாம்வரை வந்து நிற்கிறார்கள். அரசாங்க
அதிகாரிகள் முதல் மக்கள்வரை பலவகையிலும் எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன.
நாங்கள் என்னசெய்ய?" என்றார். "எப்படியோ 'சுடும் உண்மைகள்' வேலை செய்ய
ஆரம்பிக்கும்" என்றார்.
இந்த 'மக்கள் நிம்மதியாக இல்லை' என்ற செய்தி தொட்டும் நம் தலைவர்கள்
வாய் திறந்தார்களா? இதுபோன்ற
சமுதாயத்திற்குத் தேவையான பலவற்றிற்கு
வாய் திறக்காத அவர்கள், 'பேராக் மாநிலத்தில் ம.இ.கா முக்கிய புள்ளி
ஒருவர் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ' பற்றிய செய்தி வந்தவுடன் அவரவர்
அறிக்கைவிடும் அறிக்கை மன்னர்களாகிவிட்டார்கள் என்பது மிகவும்
வேதனைகுரியதாக இருக்கிறது. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ
என்று
ஊரான்வீட்டு செய்தி என்றால் வாய்க்கு அவல் கிடைத்ததுபோல் பேசுகிறார்கள்,
எழுதுகிறார்கள். அவர்களை கண்டிக்கவேண்டும். அந்தச் செய்திதொட்டு
மறுப்பறிக்கைவிட்டு அப்படிப் பேசுவது தவறு என்று சொல்லும் பெரிய மற்றும்
குட்டித் தலைவர்களுக்கு நன்றிகூறும் அதேவேளை, இதுபோன்ற சமுதாய
நலனுக்கும் அக்கரை எடுத்து 'சுடும் உண்மைகள்' உரைக்கும்
தகவல்களை
எடுத்துச்சென்று சம்பந்தப்பட்ட இலாகாக்கள், அதிகாரிகள் எனப் பார்த்துப் பேசி
தீர்வுகள் கண்டால் உத்தமம். அதுவே அனைவரின் விருப்பம்.
அன்புடன்,
பாலகோபாலன் நம்பியார்
கிள்ளான்.
அறிய வேண்டிய தகவல்!
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி, அன்புடன் பாலகோபாலன் நம்பியார்
Delete