Thursday 26 July 2012

கடல்

நீலக்கடலே! ஆழக்கடலே!
நினைத்துப் பார்த்தால் என்ன விந்தையோ
ஆழி உன்னை ஆறுகள் வந்தடைய
அம்மா போல அரவணைக்கின்றாயே!

மலை முகடு பசுமையோடு
மனிதர் சேர்க்கும் அசிங்கத்தோடு
நல்ல நீரும் சிதிலமடைய
நாடிக் கலந்தது சாக்கடைகளும்

எத்தனை ஆறுகள், எத்தனை எத்தனை அடித்து வரும்
அத்தனை விதத்திலும் எத்தனை அழுக்குகள்
முத்தமிட்டு அவை உன்மடியிலே சேர்ந்தாலும்
அத்தனை அழுக்கும் போவதும் எங்கே?
அவையும் தூய்மை ஆனதும் என்னே?

இருந்தாலும் உன்மடியிலே - என்ன மாயமோ...
இருக்கும் நீரெல்லாம் தூய்மையாகுதே!
இருந்தும் நீந்தித் திளைத்திட்டாலே
இருக்கும் நோயெல்லாம் தீரும்தானே!

பூமியிலே மூன்று பாகம் சூழ்ந்தாயே
பூமிக்கு மேலே வானவெளியெங்கும்
பூசியது நீலவண்ணம் நீயே தானோ?
சொல்லாயோ நீலவண்ணக் கடலே!

பூமியிலே ஆயிரம் பேதங்கள் உண்டு
பொறுத்து யாரும் இணைவதும் குறைவு!
நாடுகள் ஆயிரம், ஆறுகள் ஆயிரம்
நிறம், மொழி, பண்பாடு எல்லாம் வேறுவிதம்!

நாடி ஆழி உனை அவை சேர்ந்தபோதும்
நித்திலமான நீலநிறம் ஒன்றே அதற்கு!
வேற்றுமையில் ஒற்றுமையை
எப்படி விளைவித்தாய் கடலே!

பூமிக்கு மேலே இருக்கும் உலகம்
பூமியில் உள்ளார் அறிந்த உலகம்
அலைக்கரம் வீசி வீசியே உன்னுள்ளே
அடக்கி வைத்திருக்கும் உலகம் விந்தையே!



மீன்கள் நீந்தும், முத்துக்கள் பிறக்கும்
மாநில மக்கள் மரக்கலம் ஏறியே
மண்ணுக்கு மண் உறவாட உதவும்
கடல் வழிச் சாலையும் நீயே!

கடலே உன் மடியிலே நீதான்
கொண்டிருக்கும் உலகம் தனி உலகமே!
சரித்திரம் கண்டுவரும் கடலும் நீயே!
நீலக்கடலே அறிவாயா நீயே?

அமைதிக்கு அடையாளம் அகன்ற கடலே
ஆழ்ந்த உணர்வுக்கு ஆழமும் நீயே
வாழும் மாந்தர்க்கு கடல் உணவையே
வாரித்தருவதில் பூமிக்கு நிகர் நீயே!

போனவன் போனான் பூமியிலே அடக்கம்
போனவன் புண்ணியத்திற்கு உன்னிடம் அடைக்கலம்
வானுலகம் சென்றவன் வாரிசுகள் உன்னிடம்
வந்துதான் சடங்கு செய்யும்... அதற்கென்ன!

எத்தனை செய்தான் என்ன செய்தானோ?
அத்தனையும் உன்னிடம் அஸ்தி கரைக்க
அத்தனை தீமையும் விட்டுப் போனதே
அப்படி நம்பியே போனவன் காரியம் உன்னிடம் நடக்குமே!

ஆடிப்பெருக்கால் அருவிகள் பாய
கடல் பெருக்குக் கொள்வாய் நீயே!
கூடிய தம்பதிகள் குறையாது வாழவே
சூடிய நாணை புதுக்கிப் போடவே
நீடிய வாழ்வுக்கு அடையாளம் நீயே!

நெடுங்கடல் பெண்ணே! நினைத்தால் வியப்பே!
பொறுமைக்கு பூமி என்பதும் உண்மையே
பொங்கும் கடலே! நீ பொங்கினால் கொடுமையே!
எனினும் பொங்காமல் பொறுமை காக்கின்றாயே!?..

அத்தனை நீரும் உப்பாய் இருக்கும்
அதற்கும் அர்த்தம் அருமையாய் இருக்கும்!
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்னும்
உன்னத அர்த்தம் அதற்கு உண்டே!
உப்புச் சேர்த்தால் பண்டம் உருக்குலையாதே
எப்படி இப்படி இத்தனை சிறப்புகள்?

எழுகின்ற அலைகளால் இன்னிசை முழங்கியே
இசைக்கும் இலக்கணம் தருகின்ற கடலே...
கடலே உன் நீர் கதிரவன் எடுப்பான்
கார்மேகமாய் கொண்டு சென்றே
கொட்டும் மழையால் கொட்டி வளம் சேர்ப்பான்!

இத்தனை செய்தாய் இத்தரை சூழ்ந்தாய்
அத்தனை சிறப்பையும் உன்னுள் அடக்கி - அமைதி காத்தாய்!
கடல் உன் ஆழம் காண்பதும் அறிதே!




No comments:

Post a Comment