Thursday 26 July 2012

கோயிலா? கோவிலா?

கோயிலா? கோவிலா?
 
" 'கோ' எனும் நிலை மொழி 'ஒ' எனும் உயிர் ஒலிப்பு உள்ளது. 'இல்' எனும் வருமொழி உயிர் எழுத்தில் தொடங்குகிறது. எனவே, 'வ'கர உடம்படு மெய் எனும் இலக்கண விதிப்படி 'கோவில்' என எழுதவேண்டும். நாம் கோவிலை 'கோயில்' என்று தவறாக கூறி வருகிறோம், எழுதி வருகிறோம்" என்று கடந்த 27.4.2011 புதன்கிழமை மலேசிய நண்பன் பத்திரிகையின் 6-வது பக்கத்தில் பினாங்கு, பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் திரு. ஆர். காளிதாஸ் விளக்கம் தந்திருக்கிறார்.
 
இதுவரை, யாரும் தராத விளக்கம்(!?); நம் சிந்தனைக்கொரு விருந்தல்லவா!
இதைத்தொட்டு சற்று ஆராய முனைந்தேன்.
 
"இ, ஈ, ஐ வழி 'ய'வ்வும் ஏனை உயிர்வழி 'வ'வ்வும் 'ஏ' வரின் இவ்விருமையும்" - இது நன்னூல் சூத்திரம்.
 
இந்த விதிப்படி 'கோவில்' என்பது சரியே!
 
அதுமட்டுமல்ல, 'கோ' = அரசன், 'இல்' = வீடு = கோ+இல் = இரண்டும் சேர்ந்தால் அரசன்(இறைவன்) குடியிருக்கும் வீடு. அந்தவகையில், நாம் பொதுவாகவே 'கோயில்' என்று வழக்கப் படுத்திக்கொண்டோம்.
 
மேலே குறிப்பிட்ட நன்னூல் சூத்திரப்படி, "ஏனை உயிர்வழி 'வ'வ்வும் எனும் விதிப்படி 'வ்' எனும் உடம்படு மெய் தோன்றிப் புணர்ந்து 'கோவில்' என்றானது.
 
இப்படியும் விளக்கம் கொடுக்கலாம். பொதுவாக பத்திரிகைகளில் 'கோவில்' என்று ஊர் பெயர்களையும், உதாரணம் : 'கோவில்பட்டி'; 'கோயில்' என்று 'கோவில்'களையும் நாம் குறிப்பிடுகிறோம்.
 
நம் வாழ்க்கையில் நாம் வழக்கப் படுத்திக்கொண்ட பல வார்த்தைகள் தொல்காப்பியர் இலக்கணப்படி தவறு என்றாலும் அவற்றைத் தொடர்ந்து நாம் பயன்பாட்டில் கொண்டுள்ளோம்! ஆரம்பப்பள்ளி முதல் பல்கலைக் கழகம்வரை பயன்பாட்டில் இருக்கும் பாட நூல்களிலும் இதுபோன்ற தவறுகள் மலிந்து கிடக்கின்றன; அவற்றை மாற்ற முடிந்தால் பலகாலமாக 'கோயில்' என்று நாம் எழுதிவரும் சொல்லையும் 'கோவில்' என்று மாற்றலாம். இலக்கணமாவது கத்தரிக்காயாவது என்று தமிழ்க் கல்விமாண்கள் நினைத்தால் பத்தொடு பதினொன்றாக 'கோயில்' என்றே புழக்கத்தில் இருந்துவிட்டுப் போகட்டும்!
 
எனவே, திரு. ஆர். காளிதாஸ் சொன்ன விளக்கம் சரியே! காரணம், இலக்கண மரபுப்படி 'கோவில்' என்பதே சரியான வார்த்தை.
 
அன்புடன்,
 
பாலகோபாலன் நம்பியார்
கிள்ளான்



No comments:

Post a Comment