Sunday, 19 August 2012

சிறுமை அணியுமாம் தன்னை வியந்து! என் செய்ய?பகுதி 3

சென்ற 5.8.2012 ஞாயிற்றுக்கிழமை தினக் குரல் நாளிதழில் வெளியான எனது கட்டுரையின் (1) முதல் பகுதியைப் பதித்திருந்தேன். அதன் தொடர்ச்சி சென்ற 12.8.2012 ஞாயிற்றுக்கிழமை தினக் குரல் நாளிதழில் வெளியான (2) இரண்டாம் பகுதியையும் பதித்துள்ளேன். நிறைவாக 19.8.2012  ஞாயிற்றுக்கிழமை தினக் குரல் நாளிதழில் வெளியான (3) மூன்றாம் பகுதியையும் பதித்து நிறைவு செய்கிறேன்.

 தலைப்பு : "சிறுமை அணியுமாம் தன்னை வியந்து! என் செய்ய?"  
(பகுதி 3)

ன்றாடம் கேட்கிற கவிப்பேரரசுகள், 'தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்  ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி' என்று எழுதியவர்கள் எழுதுகிற திரைப்பாடல்களில் பிறமொழி சொற்கள் தாராளமாய் விளையாடுகின்றனவே!?  அவர்களைக் குறைகூறும் நம் நாட்டுக்
கவிஞர்கள், கவி மன்னர்களின் உள்ளூர்ப் பாடல்கள் மட்டும் என்விதிவிலக்கா? 


இவர்களில் சிலரும் அதே மட்டைகளே பாடும் பாடல்களில் வரும் ஆங்கில
மொழிக் கலப்புகள், மேலும் லகர, ளகர, ழகர உச்சரிப்புகள் படுமோசமாக
உள்ளதையாவது கவனித்து அதைச் சரிசெய்தால்தான் ஒலியேற்றுவோம் என
அரசாங்க வானொலியின் பொறுப்பாளர்கள் கண்டிப்பாகச் சொல்வார்களா
'
கையிலே பணமிருந்தால் கழுதைகூட அரசனடி..' என்பதுபோல, ஏதாவது
நீட்டிவிட்டால் 'லகர'மாவது, நரகமாவது;
எல்லா தர்மங்களும், எல்லா
நியாயங்களும் மறந்துபோகும்!


இவற்றைக் கேட்கிற நேயர்கள் மொழிக்கலப்படம் செய்வது குறித்து ஆய்வில்
இறங்குவதற்கான நிலையில் இல்லை எனவே, சாதாரண மக்களை, வாசகர்களை மொழிக் கலப்படம் குறித்து கண்டிப்பதில் எந்த நியாயமும் இல்லை.  இது குறித்து சிந்திக்கவேண்டியவர்களே விருதுகளுக்கும், பதவிகளுக்கும் மண்டியிடுகிறபோதுஇவர் கண்டனம் எழுப்பி என்ன பலன் வரப்போகிறது

ஒரு சமயம், சரியான விபரம் தெரியாத நிலையில், அதை ஆய்ந்து அறியாமல்
என்னை, 'இவன் ஒரு பருப்பு - செருப்பு' என்று வசைபாடியவர்கள் -  தமிழ் நெறியில்  இருந்து நெறியுடன் பேசி சிறப்புடன் வாழ்பவர்கள் என சொல்லிக் கொள்ளும் ஒரு  சிலரே!!!  அதற்காக அந்த அற்புதமான நல்லியக்கத்தை நாம் தூற்றலாகுமாஅதன் தலைவருக்கும் எனக்கும் நல்ல நெருங்கிய நட்பு இன்றுவரை இருக்கிறது ஒரு சில கருங்காலிகள் எங்கும் இருப்பார்கள் அந்தவகையில் சிலவற்றைப் பெரிதுபடுத்தி வாதத்தைத் திசை திருப்பி வாசகர்களைப் பந்தாடும் சில கருங்காலிகளும் எங்கும் இருப்பார்கள் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும்.

மேடைகளில் முழங்குகிற, பத்திரிகைகளில் எழுதுகிற தமிழக மற்றும் மலையகத்தின் பல சமூக இயக்கத் தலைவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தமிழுக்கு ஒன்றெனில் ஓடோடி வந்து குரல் கொடுக்கும் தமிழர்கள் பலரது வீட்டில் தமிழ் ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டுள்ளது!  அவர்கள் குழந்தைகளின் நாவில் பிறமொழி ஆட்சி செய்வது நேரில் பார்க்கக்கூடிய காட்சி! 

தான் எழுதுகிற, பேசுகிற சொல்,
தமிழ்ச்சொல்லா அல்லது பிறமொழிச் சொல்லா என்று தெரியாமல் பிரயோகிக்கும் வாசகனை அன்பால் திருத்துவதை விடுத்து அவர்கள்மீது பாய்வதில் என்ன நியாயம் இருக்கிறதுஇந்தப் பாய்ச்சலும் கோபமும் காட்டப்படவேண்டிய இடம் வேறு! அது பெரிய இடம் என்பதால் மெலியவர்கள் மீது கோபத்தைக் காட்டுவது நியாயமாகப் படவில்லை!  மேலும், ஒரு கதையில் வரும் கதாபாத்திரத்தின் இயல்பு நிலைக்கேற்ப பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பது என்பதுதானே கதைக்கு உயிரோட்டம்!   

"டேய்.. (அல்லது பெயர் குறிப்பிட்டு) 'பஸ்'சு  வந்திடுச்சி, சீக்கிரமா 'சைக்கிள' ஓட்டுடா, புடிக்கணும்" என்று பின்னால் அமர்ந்து  செல்லும்  ஒரு தந்தை இயல்பாகத் தன் மகனிடம் சொல்வாரா அல்லது, "கனேபேருந்து வந்து விட்டது, விரைவாகத் துவிச்சக்கர வண்டியை ஓட்டு, பிடிக்கவேண்டும்"
என்று கூறுவாரா?  கதையைச் சொல்லும் கதாசிரியர் வேண்டுமானால் நல்ல தமிழில்  கதையை நகர்த்தலாம்.

தமிழை தமிழர்கள் மட்டும் உரம் போட்டு வளர்க்கவில்லை.  பெஸ்கி (வீரமாமுனிவர்), ஜி.யு.போப் என்று தொடரும் அந்நியர்கள் உட்பட கோ.சா.,.வெ.ரா. போன்ற தெலுங்கர், மலையாளிகளும் தமிழுக்குத் தொண்டாற்றிருக்கிறார்கள், ஆற்றியும் வருகிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர். ஒரு மலையாளி என்ற உண்மையை கலைஞர்  சொன்னபோதும் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை அவர்தான் சட்டமாக்கினார்.
தமிழுக்கு ஒரு 'தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்' கண்டார்அவர் இருக்கும்வரை ஈழத் தமிழர்களுக்கு இன்றுவரை எவரும் செய்யாத அளவுக்கு அதிகமாகச் செய்தார்.

இங்கே, மலேசியாவில் 'டேவான் பாகாசா டான் புஸ்தகா' என்றொரு அமைப்பு
இருக்கிறது.  அது மலாய் மொழி வார்த்தைகளை, சொற்களை செப்பணிடுகிறது. தமிழக அரசு என்ன செய்கிறது?  குஷ்புவின் முற்போக்குக் கருத்துகளோடு(?)  முத்தமிட்டுக் கொண்டிருக்கிறது!  இங்கேயாவது ஏதும் செய்யலாமே

மலையாளம் மொழி என்பதே - ஆதி தமிழ், நல்ல தமிழ்.  "செய்திகள், வாசிக்குன்னது  உன்னி கிருஷ்ணன்" என்பதே நல்ல தமிழ்தானே? மேலும், பரவாயில்லை என்பதற்கு,  'தரக்கேடுல்லா' என்று மலையாளத்தில் சொல்லப்படும் வார்த்தைதான் அசல் தமிழ்.  ஆனால் இதுபோன்ற பல நல்ல தமிழ் வார்த்தைகள் மலையாளத்தில் கோலோச்சுகிறது!  வேற்றுமொழியான, உருது வார்த்தையான 'பரவாயில்லை' நமக்குத் தமிழாக வாழ்வது  எத்தனைப் பேருக்குத் தெரியும்?   ஆனால், ஏதோ காரணங்களுக்காக, (அதைச் சொல்ல
இன்னும் நிறைய பக்கங்கள் வேண்டும்) அவர்கள் எழுத்தச்சனால் எழுத்துகள்
உருவாக்கப்பட்டு, தனி மொழியாக நிலை நிறுத்திக் கொண்டார்கள்.
திருக்குறளில் "வெள்ளத்து அனைய மலர்நீட்டம்; மாந்தர்தம் உள்ளத்து அனையது  உயர்வு" என்று தெய்வப் புலவர் சொல்லியிருக்கிறார்அதில் வரும் அந்த 'வெள்ளம்' என்ற நல்ல தமிழ்ச்சொல்லை இப்பொழுது பயன்பாட்டில் வைத்திருப்பவர்கள் யார்? நீர், தண்ணீர், தண்ணி என்று மட்டும்தானே சொல்கிறோம்!  தண்ணீர் எங்காவது கரைபுரண்டோடும்போது மட்டும் 'வெள்ளப்பெருக்கு' என்று சொல்கிறோம்.  அந்த நல்ல சொல்லை விட்டது யார்?  வைத்துக்கொண்டது யார்?  இப்படியாக எத்தனை எத்தனையோ நல்ல தமிழ்ச்சொற்கள் மற்ற மொழிக்காரர்களால் கோலோட்சிக் கொண்டிருக்கிறது
மலையாள மொழியின் வயதே சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கும் மேல்தான்இவ்வாறுதான் தெலுங்கும், கன்னடமும் தனிமொழியாக ஆகின

'காப்பி' அடித்தல் என்ற வார்த்தையை சொன்ன வாசகருக்கு பதில்கூறும் தருவாயில்கூட....... "கருத்துற்றதன் அடிப்படையில்தான் 'காப்பி' அடிக்கிறேன்." என்று அவரும்  பிறமொழிச் சொல்லைப் பிரயோகப் படுத்தியிருக்கிறார்.  'பின்பற்றியிருக்கிறேன், பார்த்தெழுதியிருக்கிறேன், மாதிரி எடுத்தேன்' என்றோ அல்லது அவருக்குத் தெரிந்த இன்னும் சரியான தமிழிலோ அந்தக் 'காப்பி'க்குப் பதில் நல்ல தமிழை அந்த வாசகருக்கு ஊட்டியிருக்கலாமல்லவா?

எது எப்படியோ, 'சாண் ஏறினால் முழம் சருக்கல்' என்ற நிலையில்தான் இங்கும்  சரி, தமிழகத்திலும் சரி தமிழின் நிலை இருக்கிறதுதமிழ்ப் பற்றாளர்களின் வீட்டுப் பிள்ளைகளே அதற்குச் சான்று பகர்கின்றனர் என்பதே வேதனைக்குரிய செய்தி!

இதை உணர்வார் யார்?  உணர்ந்தாலும் அதைப்பற்றிப் பேசமாட்டார்கள்மூடி
மறைத்துக்கொண்டு, ஊருக்கு உபதேசம் செய்வதில் வல்லவர்கள் நம் தமிழ்ப்
பற்றாளர்கள் என்பதே உண்மை என்பதை அவரும் அறிவார்.  சிறுமதியாளர்
வீண் பெருமை அதுதானே! - என் செய்ய?

நாங்களும் எழுதி படிப்படியாக வளரவேண்டும் என்று வரும் வளரும் பயிர்களுக்குத்  தண்ணீர் ஊற்றாவிட்டாலும், பிறமொழிக் கலப்பு என்ற பெயரில் வெண்ணீர் ஊற்றிச் சாகடித்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

மெனக்கெட்டு, சில தேடல்களுக்குப்பின் இக்கட்டுரையை எழுதுகிறேன்.  எல்லாமே தமிழின்பால் எனக்குள்ள ஈர்ப்பால், உணர்வால் பகர்ந்துள்ளேன். 
இதில் தப்பித்தவறி  குற்றங்குறைகள் ஏதாவது இருப்பின் அன்புகூர்ந்து பொறுத்தருள வேண்டும்.

நிறைவாக, தீவிரவாதிகளையும், தீவிரவாதப் போக்குடையவர்களையும் யாரும் விரும்பமாட்டார்கள்அது மதமாகட்டம், இனமாகட்டும் அல்லது மொழியாகட்டும் எல்லாவற்றிற்கும் அது பொருந்தும்!


                                                       ***முற்றும்***
அன்புடன்,

பாலகோபாலன் நம்பியார்,
கிள்ளான் மாவட்டத் தமிழ் வாசகர் எழுத்தாளர் இயக்கம்.

Saturday, 18 August 2012

சிறுமை அணியுமாம் தன்னை வியந்து! என் செய்ய?பகுதி 2

சென்ற 5.8.2012 ஞாயிற்றுக்கிழமை தினக் குரல் நாளிதழில் வெளியான எனது கட்டுரையின் (1) முதல் பகுதியைப் பதித்திருந்தேன். அதன் தொடர்ச்சி சென்ற 12.8.2012 ஞாயிற்றுக்கிழமை தினக் குரல் நாளிதழில் வெளியான (2) இரண்டாம் பகுதிதான் இது...

தலைப்பு : "சிறுமை அணியுமாம் தன்னை வியந்து! என் செய்ய?"
(பகுதி 2)


தமிழர்கள் இருக்கும் மலேசியா, சிங்கை, இலங்கை மேற்கத்திய நாடுகள் மற்றும் தமிழகம் போன்ற ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரியான சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. இதனை ஒருங்கிணைத்து சரியாக வழிகாட்டிச் செல்லவேண்டுமென்ற தலைமை எங்கே உள்ளது? மிகுந்த ஆர்வம்கொண்ட தமிழ்நெறியாளர்கள் தமிழ்ப் பேரியக்கங்களில் இங்கே இருக்கிறார்கள். அவர்களாவது ஏதாவது செய்யலாமே! சின்னச் சின்ன இயக்கங்களும், ஆர்வலர்களும் துணை நிற்பார்கள் என்பது உறுதி. அதை அரசியல் ரீதியில் அங்கீகரிக்க தலைவர்களும் ஆவண செய்ய வேண்டும்! மேடை கிடைத்ததற்காகப் பேசிவிட்டுச் சென்றால் மட்டும் போதாது!

எஃப்.எம் (FM) என்பதற்கு 'பண்பலை' என்று மலேசியத் தமிழர்கள்தான் முன்மொழிந்தார்கள். ஆனால் இன்று அந்தப் பண்பலை, 'எஃப்.எம்' ஆனது யாரால்? இதற்கும் மக்களுக்கும் என்ன தொடர்பு? எனவே, மக்களை, நேயர்களை ஒதுக்கிய நிலையில் சில காரியங்கள் நடக்கின்றன! இதற்கு யார் பொறுப்பு?


நிறைய தமிழ்ச் சொற்கள் சமஸ்கிருதம் என்ற மயக்கத்தில் தமிழில் இருக்கின்றன. 'சலம்' என்ற சொல் அப்பரால் தேவாரத்தில் பயன் படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்தச்சொல் 'ஜலம்' என்ற சொல்லில் இருந்து வந்ததாகச் சில மேதாவிகள் சொல்லி வருகிறார்கள்.


தமிழ் என்பது மூவெழுத்துகளால் இயன்று, தமிழ்ச் சொற்களின் எழுத்-

தெண்ணிக்கையைக் குறிப்பாய் உணர்த்துகிறது. தமிழ்ச்சொற்கள் ஓரெழுத்து ஒரு மொழி, ஈரெழுத்து ஒரு மொழி, தொடர்மொழி என மூவகைப்படும் என்பது அறிந்ததே. தொடர்மொழி என்பது மூவெழுத்து மொழியினையும், நான்கெழுத்து மொழியினையும் குறிக்கும்தானே? நான்கெழுத்து மொழி பெரும்பாலும் உகர ஈற்றதாய்த் திகழும் - கணக்கு, வழக்கு (எண் - எழுத்து) என்பன அதற்குச் சான்றுகளாகும். நெடிற்றொடர் ஒழிந்த ஐந்து குற்றுகர ஈற்றுத்தொடர் மொழிகளும் மூவெழுத்து மொழிகளே. இலக்கணம், இலக்கியம் இரண்டும் நான்கெழுத்தெனும் வரையறையை மீறியுள்ளனவேயெனில், அவை தமிழ்ச் சொற்கள் அல்ல; வடச் சொற்கள். லட்சியம் (இலட்சியம்), லட்சணம் (இலட்சணம்) எனும் சமஸ்கிருதச் சொற்களின் தற்பவமாகும். அவற்றைத் தமிழ் எனக் கருதிச் சிலர் வலிந்து தரும் விளக்கங்கள் ஏற்புடையனவல்ல!

ஆனால், நாம் எல்லோரும்... (தமிழ் அருவிகள் என்றும், தமிழ்க் காப்பாளர்கள் என்றும், தனித்தமிழ் இயக்கம் என்றும், தமிழ்நெறி உணர்வாளர்கள் என்றும் கூறிக்கொள்வோர் உட்பட) முழுமையாக மிகச்சிறந்த அப்பழுக்கில்லாத தமிழையா உரைக்கின்றோம்? சீர்மிகு தமிழையா எழுதுகின்றோம்? நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, அறியாமலோ, உணராமலோ பிழைகள் பல செய்கிறோம் - செய்தும் வருகிறோம்.


அவை ஒல்லாந்தர் (டச்சு), போர்த்துகேயர், ஆங்கிலேயர், சமஸ்கிருதம், வடச்சொல், அரபு, உருது என ஏதாவதொரு ரூபத்தில் மறைந்திருக்கின்றன. சமஸ்கிருதம் மக்கள் பேசாத மொழி. தமிழ், மக்களால் பேசப்படும் அற்புதமான மொழி. அதேநேரம் பல்வேறு இன, மொழி ஆட்சிக்கு உட்பட்டுவந்த மொழியும்கூட; அதனால் பல்வேறு பிறமொழி சொற்கள் தமிழை அண்டி வந்திருக்கலாம். அதுபோல, தமிழ்ச் சொற்கள் அவர்கள் மொழியிலும் கலந்திருக்கலாம். உருது சொல்லான 'ராவுத்தர்' என்ற வார்த்தையை அன்றே முருகனடியாரான 'குமரகுருபரர்' தன் பாடலில் குறிப்பிட்டிருக்கிறார். 'பரவாயில்லை' என்று சர்வசாதாரணமாகச் சொல்கிறோம்! ஆனால், அது தமிழ்ச்சொல் கிடையாது, உருதுச்சொல் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?


'சாதாரண' மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கே ஒரு போராட்டம் செய்ய வேண்டிய நிலையில் இருக்க, மொழியில் பிறமொழி சொற்கள் கலந்ததை அல்லது கலந்திருப்பதை எவ்வாறு அறிவார்கள்? ஆரம்பப்பள்ளியில் படித்துக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கே இங்குப் பாடம் நடத்த வேண்டியிருக்கிறதே! அதே நிலையில்தான் தமிழ்ப்பத்திரிகையில் பணியாற்றும் பலரும் இருக்கிறார்கள். பத்திரிகையில் வேலை செய்துகொண்டே புனைப்பெயரில் எழுதி வாசகர்களைக் காயப்படுத்தும் 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று கூறும் நக்கீரர்கள் முதலில்

அவர்களைத் திருத்தட்டும்.

தினசரி தமிழால் பிழைப்பு நடத்தும் இவர்களுக்கே தமிழ் 'தண்ணி' காட்டுகிறதென்றால் சாதாரண, சாமானிய வாசகனுக்கு எப்படி? இதில் கதையில் அழுத்தம் இல்லை, ஆழம் இல்லை என்ற சொல்வேறு! இனி கதைகளில் ஆறு, கிணறு, குளம், குட்டை என்று சேர்த்து எழுதி இப்பொழுது கதைகள் ஆழமாக இருக்கிறதா என்றெல்லாம்
  கேட்கவேண்டுமோ! 
இப்பொழுது பிரசுரமாகும் கதைகள் எல்லாமே சிறந்த, ஆழமான கருத்தை வெளிப்படுத்தும் கதைகளா? பிரபல எழுத்தாளர்கள் முதல் என்னைபோன்ற சாதாரண கத்துக்குட்டி எழுத்தாளர்கள்வரை படைக்கும் படைப்புகள் எல்லாமே சிறந்த படைப்புகளா? விமர்சனம் என்று வந்துவிட்டால் பிரபலங்களின் படைப்புகளிலும் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டலாம்! ஆனால், அவர்களைப்பற்றிய 'ஆகா.. ஓகோ.. சூப்பர்' என்றுவரும் விமர்சனங்கள் மட்டுமே பொதுவாகப் பிரசுரமாகின்றன! தெளிவாக நான் எழுதி அனுப்பிய மிகப்பிரபல பழம்பெரும் எழுத்தாளரின் (முனைவர்) ஒரு சிறுகதைப் பற்றிய விமர்சனம் இருட்டடிப்பு செய்யப்பட்டது; இரு வாரங்களுக்குப்பிறகு அந்த ஞாயிறு பத்திரிகை பொறுப்பாசிரியர் என்னை அழைத்து, 'உங்களுடைய விமர்சனம் சரிதான் பாலன், ஆனால் அவர் எங்களுக்கு வேண்டியவர், அதனால் பிரசுரிக்கவில்லை' என்றார். இது எப்படி இருக்கிறது! மற்ற வாசகர்களின் விமர்சனங்கள் மட்டும் தாறுமாறாக வரலாம், பிரபலங்களின் விமர்சனங்கள் மட்டும் கூடாதாம்?

தொடரும்...3)

சிறுமை அணியுமாம் தன்னை வியந்து! என் செய்ய?பகுதி1

சென்ற 5.8.2012 ஞாயிற்றுக்கிழமை தினக் குரல் நாளிதழில் வெளியான எனது கட்டுரையின் (1) முதல் பகுதி...


தலைப்பு : "சிறுமை அணியுமாம் தன்னை வியந்து! என் செய்ய?"
பகுதி - 1 
 
"தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடைய மொழியாகும்
அன்பே அவனுடைய வழியாகும்"
என்றார் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள்.

அன்புவழி, இன்பவழியாய் - அகவழியாய்க் களவுவழியாய் மலர்ந்தது. காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுப்பட்ட இன்பத்தையே அவன் பொருளாய்க் கருதினான். அப்பொருளினையே ஓதுவதால் தமிழிற்கும் 'அகவாழ்வு' எனும் பொருள் உண்டாயிற்று. இம்மூன்றனையும் முறையே எழுத்து, சொல், பொருள் எனும் தலைப்புகளால் தொல்காப்பியர் ஓதினார். அதனால் தமிழன் அகவாழ்வு - பொருள்வாழ்வு என்றும் நிலைத்திருக்கிறது. அன்பு வாழ்விற்கு ஊறு நேரும்போது அவ் வன்பே வீரமாய் உருவெடுக்கிறது. இதுவும் செவியுற்றது, கண்ணுற்றது; இவையிரண்டின் வழி கருத்துற்றதன் அடிப்படையில்தான் அதன் மாதிரியைப் பின்பற்றி எழுதுகிறேன். இதில் தவறில்லை!


அந்த அடிப்படையில் தமிழனின் குணம் - இனமான உணர்வு மேலோங்கும் சமயம்; அவரவர் நிலையில் மாறுபடுகிறது, வேறுபடுகிறது என்பதுவும் உண்மை.


'சாதாரண வாசகர்கள்' என்ற நிலையில், அவர்கள் தமிழ் மொழியில் மற்ற மொழிச் சொற்களைக் கலக்காமல் எழுதுவதும், பேசுவதும், வெளிப்படுத்துவதும் என்பது சற்றுக் கடினம் என்பதைச் சில மேதாவிகள் இன்னும் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்ற தோரணையில்
நக்கீரர்களாகச் சிலர் செயல்படுகிறார்கள்.

அதைச்சொல்வதற்குமுன், அண்மையில் இங்கு ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன். நிகழ்ச்சிக்குப் பேச வந்த ஒருவர், வந்தவர்கள் முன்னிலையில் ஒருசிலரை நேரடியாக அவர்கள் எழுதி அனுப்பும் கவிதைகள், கட்டுரைகளின் தன்மையைத் தொட்டுப் பேசினார். அப்போதுதான்
  அவர்கள் இலட்சணம் எங்களுக்கும் தெரிந்தது என்றாலும் அந்த இடத்தில் அப்படி அவர்களைச் சொல்லி சிறுமைப் படுத்தியதில் நிச்சயமாக மனதளவில் நொந்து போயிருப்பார்கள் அல்லவா!

ஒருவர் பெயரைச்சொல்லி அவர், 'என்ன குப்பையை எழுதி அனுப்பினாலும் திருத்தி கவிதை என்று போடுகிறோம்' என்றார். மற்றவரை, 'நீங்கள் எழுதும் தொடர் கட்டுரையில் எவ்வளவு எழுத்துப் பிழைகள்; நீங்களுமா இப்படி?' என்றார். அவருடைய அந்தக் கருத்தில் நான் உடன்பட்டாலும், அடிக்கடி எழுதும் அவர்களுடன் தொடர்பு கொண்டு தனிப்பட்ட முறையில் அதைச்சொல்வதுதானே பண்பாடு!
  அல்லது, அந்தக் கலந்துரையாடலில் பொதுவாகத் தன் கருத்தைச் சொல்லி, 'இங்கு சம்பந்தப்பட்ட சிலரும் வந்துள்ளார்கள்; அவர்கள் கவனத்தில் கொள்ளட்டும்' என்ற அன்பான வேண்டுகோளை விடுத்து, 'பல காலமாக எழுதிவரும் உங்களை நீங்கள் பண்படுத்திக் கொள்ளாவிட்டால் உங்கள் படைப்புகள் பரிசீலனையில் வைக்கப்படும்' என்று சொல்லியிருந்தாலாவது அவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள். வாசகர்களின் கவனத்திற்கு, என தங்கள் பத்திரிகையிலும் விரிவாக, பொதுவாக எழுதலாம்தானே!

இனி நக்கீரர்களுக்கு நான் சொல்லவந்ததைச் சொல்கிறேன். பொதுவாகவே, பலரும் மேடைகளிலோ, சாதாரணமாகப் பேசும்பொழுதோ அல்லது கதைகள் எழுதும்போதும் கூட பிற மொழிச் சொற்கள் தட்டுப்படுவது இயல்பாகிவிட்டது. மொழியில் கலப்படம்
  என்பது தமிழில் மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் இருக்கிறது. உலகம் முழுவதும் பேசப்படும் ஆங்கிலம் - தனித்துவ மொழி அல்ல. பல்வேறு மொழிகளின் கூட்டு. ஏன்! நம் நாட்டின் தேசியமொழியிலிருந்து பிறமொழிச் சொற்களை எல்லாம் நீக்கிவிட்டால் அங்கு மிஞ்சியிருப்பது வெறும் Paku, Besi  போன்ற இன்னும் சில சொற்களேயாகும். மொழியில் கலப்படம் எவ்வாறு வருகிறது அல்லது வந்திருக்கிறது என்றால், அது பிற இனத்தவர்களால்தான். பிற இனத்தவர்களின் படையெடுப்பினால், குடியேற்றத்தால் மொழிகளில் பிற மொழிச்சொற்கள் கலந்தன.

சென்னையில் பேசப்படும் 'தமிழ்', சென்னையில் நெடுங்காலமாக குடியிருக்கின்ற ஆந்திர மாநிலத்தவர்களின் மொழியால் உருவானது. இலங்கையில் 'ஒல்லாந்தர்' (டச்சுக்காரர்கள்) மற்றும் 'போர்த்துகேயர்' ஆகிய நாட்டவர்களின் ஆட்சியினால் 'சப்பாத்து', 'கச்சேரி', 'சன்னல்' என பல சொற்கள் தமிழில் சேர்ந்தன. ஆங்கிலேயர் ஆட்சியின்போது, ஆங்கிலச் சொற்களான 'சினிமா', 'பஸ்',  'லீவு' போன்ற பலப்பல சொற்கள் தமிழாக மயங்கி நின்றன - நிற்கின்றன! தமிழைச்சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகளினால் ஆங்கிலம் மரியாதைக்குரிய மொழியாகவே இருந்தன. இந்தியை எதிர்ப்பதற்காக தமிழைக் கேடயமாக்காமல் ஆங்கிலத்தைக் கேடயமாக்கியதால் தமிழில் மேலும் ஆங்கிலச்சொற்கள் கலந்தன. இவை திராவிடர் கழக அரசின் ஆசீர்வாதத்தால் இன்றும் நடக்கிறது.


தி.மு.க குடும்பம் தொடங்கிய தொலைகாட்சி கேரளாவில், ஆந்திராவில் அந்தந்த மொழிச் சொற்களை முதல் சொல்லாகக் கொண்டிருக்க, தமிழில் மட்டும் 'சன் டிவி'. இதனை செம்மொழி மாநாடுகண்ட அன்றைய முதல்வர் கலைஞர் கண்டுகொள்ளவே இல்லை. ஆக, அங்கும் சரி, இங்கும் சரி, தமிழ் பலருக்கு அரசியல் மற்றும் சமூகத்
தொழிலுக்கு 'முதல்'ஆக இருக்கிறது. ஆக, தமிழில் கலப்படச் சொற்களுக்கு ஆட்சியில் அமர்ந்திருக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் காரணமாகிறார்கள். இல்லையெனில் இங்கும்கூட, முறையாக எழுதப்படாத அல்லது எழுத்துப்பிழைகள் மலிந்த சில தமிழ் நூல்கள் இன்று மாணவர்களின் பாடத்தேர்வுக்கு வழிகாட்டி நூலாக வந்திருக்க வாய்ப்பில்லை. ஓர் உதாரணம்,  'பி.எம்.ஆர்' கட்டுரைகள்' (படிவம் மூன்று) என்ற தலைப்பில் உள்ள நூல்! நாகரீகம் கருதி ஆசிரியர் மற்றும் பதிப்பாசிரியர் பற்றியத் தகவலை இங்கு வெளியிடவில்லை.

இன்றைக்கு தமிழகத் தொலைகாட்சிகளில் (மக்கள் தொலைக்காட்சி அல்ல) தமிழ் ஊறுகாய்போல் தொட்டுக் கொள்ளப்படுகிறது. கலப்பில்லாத தமிழில் தமிழகத்தில் பேசினாலோ, அல்லது இங்குள்ள சிலரிடம் பேசினாலோ - செவ்வாய்க் கிரகவாசியாகப் பார்க்கப்படுவதே உண்மை!


கலப்பில்லாத தமிழ் பேசுவது இன்பம். ஆனால் எங்கு பேசுவது? வேற்று கிரகத்திலா? அதனை வரவேற்கின்ற அரசும் தமிழ் நிலமும் எங்கு இருக்கிறது? மேடைகளில் தூய தமிழ் பேசுகிற தமிழகத் தலைவர்கள் முதல் இங்குள்ள தமிழ்நெறி உணர்வாளர்கள்
  உட்பட அவர்கள் இல்லங்களில் வேறு தமிழ் பேசுகிறார்கள். உண்மை இப்படி இருக்க, சாதாரண மக்களை, சாதாரண வாசகனை எப்படிப்பட்ட தமிழ் மொழிப் பற்றாளரும் குறை சொல்ல முடியாது. இதை யாரும் எழுதியோ, பேசியோ வெல்ல முடியாது! இதற்கு அறுவை சிகிச்சையும் நீண்டகால மருத்துவமும் தேவை. அதற்கு முறையான நிபுணத்துவ மருத்துவமனை வேண்டும். அந்த மருத்துவமனைதான் தமிழர்களுக்கென்று ஒரு அரசாங்கம் - நாடு! அல்லது சரியான, முறையான ஒரு இயக்கம் - பேரியக்கம்! அதனை யார் செய்வது? எங்கு தொடங்குவது என்பதே ஆய்வுக்குரியது.

நிலைமையும் உண்மையும் இவ்வாறு இருக்க, தப்பித் தவறிவாசகர்கள் அனுப்பும் படைப்புகளில் 'காப்பி'யடித்தல், வசூல், ரத்து, அசல், ராஜினாமா என்று இப்படி ஏதாவது சொற்கள் வந்துவிட்டால் அவை அரபுச்சொல்லா, உருதுச்சொல்லா, வடச்சொல்லா அல்லது ஆங்கிலச் சொல்லா என்பதை எத்தனை பேர் அறிவார்கள்?


அதைக் கண்டித்து பத்திரிகையில் வேலை செய்துகொண்டே புனைப் பெயரில் எழுதி, 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று அந்த வாசகர்களைக் காயப்படுத்துபவர்களை என்னவென்று சொல்வது?


மற்ற மொழிக்காரர்கள் (உதாரணத்திற்கு : ஆங்கிலம், மலாய்) அவர்கள் மொழியில் கலந்திருக்கும் பிறமொழிச் சொற்களைப்பற்றி அவர்கள் அலட்டிக்கொள்ளவில்லையே! நமக்கு மூன்று லட்சம் வார்த்தைகள் இருக்கிறது, நமக்குத் தேவையில்லை பிறமொழிச் சொற்கள் என்றால் பின் அதை முறையாகக் கொண்டுவருவது எப்படி?


அடுத்த தலைமுறைக்கு அதைக்கொண்டு செல்லவேண்டும். அதற்கு அடிப்படையில் ஆரம்பப்பள்ளியிலிருந்து ஆரம்பிக்கவேண்டும் அல்லவா! பூனைக்கு மணிக் கட்டுவது யார்?


பத்திரிகைகளுக்கு எழுதுபவர்களின் எண்ணிக்கையே குறைவு; இதில் இப்படிவேறு இடையூறு என்பது கூடாது! சொல்லவேண்டுமானால், நான் மேற்குறிப்பிட்டதுபோல பத்திரிகையிலேயே பொதுவானதொரு கட்டுரை எழுதி விளக்கலாம். என்றாலும், மாற்றுவதும், மாறுவதும் சிரமமான பணியே!


இங்குதான் ஒவ்வொருவரும், ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு பேச்சு
  பேசுகிறார்களே! அவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு என்கிறார்களே!  உதாரணத்திற்கு, 'கைத்தொலைப்பேசி' என்று மட்டும் சொல்லிவந்ததை கைப்பேசி', 'உலாப்பேசி', 'அலைப்பேசி' என்றும் சொல்கிறார்களே!

அதுபோல, 'ஃப்பேக்ஸ்' - என்ற சொல்லுக்குத் தமிழில் தொலை நகல், தொலைப்பதிவு, தொலை அச்சு, சாயை ஆகிய சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. இச்சொற்களில் ஓரளவு தமிழறிவு உள்ள மக்கள் எதைப் பயன்படுத்துவார்கள்? இதை - இந்தச் சொல்லை - பயன்படுத்துங்கள் என்று சொல்ல யார் இருக்கிறார்கள்?


'ஓ.. யானைக்கு கரி, களிறு, வேழம் என்று இன்னும் பல பெயர்கள் இருப்பதுபோல, இன்னும் பல சொற்கள் பலவற்றிற்கும் இருப்பதுபோல் இதுவும் இருந்துவிட்டுப் போகட்டுமே'  என எண்ணலாம்!  இருக்கட்டுமே; என்றாலும் புழக்கத்தில் இருப்பது 'யானை' என்ற சொல்தானே! இது வாசகர்களை மட்டுமா, தமிழ் பயிலும் மாணவர்களுக்கும் பெரும் சோதனையல்லவா? இங்கு ஆரம்பமே தகராறு, பிறகு எப்படி நல்ல தமிழ் வளரும்!


(தொடரும்...2)

Wednesday, 1 August 2012

உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை

இன்று (1.8.2012) தினக் குரலில் வெளிவந்த எனது கட்டுரை


பொருள்
: உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை


ம் நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க இலாகாக்களிலும் உயர் அதிகாரிகள்
பொறுப்பில் அமர்ந்திருக்கும் இந்தியர்களின் விகிதாச்சாரம் படுமோசமாக
சரிந்துபோய் இருப்பது தினக் குரல் தொடர்ந்து நமக்குத் தந்துகொண்டிருக்கும்
புள்ளி விபரங்களின்வழிதான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். 

உள்துறை அமைச்சின் தலைமை இயக்குனரே அங்கு வேறு அலுவல் காரணமாகச்
செல்லும் இந்தியர்களிடம், 'யார் அந்த ஆசிரியர்? அவருக்கு எப்படி இப்படி ஒவ்வொரு
அரசாங்கத் துறைகளில் பணிபுரியும் உயர் அதிகாரிகளின் புள்ளி விபரங்கள்
தெரியவருகிறது என்று துப்புத்துலக்க ஆரம்பித்துவிட்டார். தினக் குரல் ஆசிரியர் 
சொல்வது அனைத்தும் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை
என்பதால், பயமில்லை!  இதற்குமுன்பே  'சுடும் உண்மைகள்' வழி சுயமாக எழுதி
வந்த அவருக்குச் சில சோதனைகள் எழுதிவந்த பத்திரிகையிலேயே வந்தன.
வெளியிலிருந்தும் வந்தது!  அதைத்தான் சென்ற ஞாயிறு 'அக்கம் பக்கம்' பகுதியில்,
'அழுதே இருக்கிறேன்' என பதில் அளித்துள்ளார்.

மிகவும் மென்மையான சுபாவம் கொண்ட அவருக்குள் அபரிமிதமான துணிச்சலும்,
ஆண்மைமிக்க எழுத்தாற்றலும் இருப்பதை 1997'லிருந்தே எனக்குத் தெரியும்.
அவரைத் தொடர்ந்து வருபவர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.  இப்படி
தொழிலிலும், வெளியிலும் தனக்கு எந்தப் பாதிப்பு வந்தாலும் கொண்ட கொள்கையை
விட்டுக்கொடுக்காமல் இருந்துவந்த அவருக்கு இன்று நல்லதொரு 'பீடம்' கிடைத்து
விட்டது. அதன்வழி, மக்களுக்காக மாறுபட்ட முன்பக்க செய்திகளையும், நல்லபல
தகவல்களையும், வாசகர்கள் பங்கெடுப்பதற்காக நிறைய புதிய அங்கங்கள், வாசகர்
கடிதங்களுக்கும் ஆசிரியர் தரும் விளக்கங்கள், கத்தரி படாமல் பிரசுரிக்கப்படும்
வாசகர் குரல்கள் என சிரத்தையுடன் பல காரியங்களாற்றி வரும் அவருக்கு முதலில்
நாம் பாராட்டு தெரிவிக்கவேண்டும். ஏனென்றால், இப்பொழுது அவர் ஒரு
தனிக்காட்டு ராஜா'வாகத் திகழ்கிறார்.

இந்த நிலையில், இதுகாறும் அரசாங்க இலாகாக்களில் பணிபுரியும் இந்தியர்களின்
விகிதாச்சாரம் மனநிறைவளிக்கும் வகையில் இருக்கிறது என்று  சொன்ன நமது
பொறுப்புமிக்கத் தலைவர்கள்(!?) தினக் குரல் தந்த புள்ளி விபரங்களுக்கு வாய்மூடி
மௌனிகளாகவே இருக்கின்றனர்.  மேலும், ஆசிரியர் அவர்கள் எழுதும் எந்த ஒரு
முக்கியமான செய்தியைத்தொட்டும்  பொதுவாகவே அதிகாரத்தில் இருக்கும் நம்
தலைவர்களும் சரி, மற்ற பொறுப்பாளர்களும் சரி, பதில் சொல்வதும் இல்லை,
'அவற்றிற்குத் தீர்வுகாணப்படும்' என்ற ஆறுதல் வார்த்தையும் காணோம்.

'மக்கள் நிம்மதியாக இல்லை' என்ற தலைப்பில் 26.7.2012 அன்று வந்த
'சுடும் உண்மைகள்'களை எத்தனைப்பேர் படித்திருப்பார்கள் என்பது தெரியாது!
படிக்கவேண்டிய கட்டுரை. பொதுவாகவே, ஞாயிற்றுக்கிழமை மட்டும்
தமிழ்ப்பத்திரிகைகள் வாங்கும் பழக்கம் நம் இந்தியர்களிடையே அதிகமாக
இருக்கிறது என்பது வேதனைக்குறிய செய்தி.  வெளியில் தேநீர், சுவைநீர்
குடிப்பதற்கென்றும், புகை பிடிப்பதற்கும், மது அருந்துவதற்கும் செலவு
செய்யக்கூடிய பணத்தில் தினசரி ஒரு தமிழ்ப்பத்திரிகையை வாங்கிப் படிப்பதற்கு
என்ன சுணக்கம்?  எல்லா பத்திரிகைகளுக்கும் விற்பனை அதிகம் ஏற்படுமல்லவா?
அங்கே நம் சகோதர சகோதரிகளுக்கு அதிகமாக வேலை வாய்ப்புகளும் சம்பள
உயர்வும் ஏற்படும் அல்லவா?  விற்பனை அதிகம் இல்லாமல் எப்படி பக்கங்கள்
பெருகும், எப்படி நிருபர்கள் அதிகரிப்பார்கள்?  நாமே நம் பத்திரிகை உலகுக்கு
வேலை வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள, சம்பளத்தைப் பெருக்கிக்கொள்ள
முட்டுக்கட்டையாக இருக்கும்போது, 'வாய்ச்சொல் வீரனாக'மட்டும்
இருந்தென்ன பயன்?

சரி, விஷயத்திற்கு வருகிறேன்.  'நாட்டில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை
குறைந்திருப்பதாக'  உள்துறை அமைச்சர் முதல் போலீஸ் இன்ஸ்பெக்டர்
உள்பட போலீஸ் உயர் பதவிகளில் இருப்போரும் சொல்லிவருவதாக மேற்சொன்ன
'சுடும் உண்மைகள்' வழி ஆசிரியர் கூறியிருக்கிறார்.  அந்தத் தகவல் ஒரு
'வடிகடியஅண்டப்புளுகு' என்பதை மிகச்சரியான உண்மைகளுடன் அவர்
எழுதி இருக்கிறார்.  மிக உயரிய பொறுப்பில் இருப்பவர்கள் மக்களுக்குத் தவறான
தகவல்களைத் தருவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்பதை சூசகமாக
எடுத்தியம்பியிருக்கிறார்.  'போலீஸ் படையில் மட்டுமல்ல, அரசு
துறைகளிலும் ஆரவாரம்தான் அதிகமாக இருக்கிறது'  என்று துணிச்சலுடன்
சொல்லியிருக்கிறார். "ஆசிரியரின் இந்த வார்த்தை தன்னைக் கவர்ந்ததாக" உயர்
பதவியில், அதிகாரத்தில் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி நான் அவரிடம்
பேசும்பொழுது என்னிடம் சொன்னார்.  மேலும், அந்தச் சுடும் உண்மைகளில்
உள்ள செய்திகள் அத்தனையும் அப்பட்டமான உண்மை எனவும் சொன்னார்.

"அதுமட்டுமல்ல, பல காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட சுமார்
ஐயாயிரத்திற்கும் அதிகமானவர்களில் என்னூறுக்கும் மேற்பட்டவர்கள்,
அதாவது சுமார் 16 விழுக்காட்டினர் நம் இந்திய சமுதாயத்தினர் என்பது வருத்தப்
படக்கூடிய பதிவு என்றார். எந்த இனத்தவரானாலும் கைது செய்த கொஞ்ச
நாளில் பெரும்பாலோர் வெளியே வந்துவிடக்கூடிய காட்சிதான் காணமுடிகிறது.
போலீசார் சற்று மூர்க்கத்தனமாக செயல்பட்டால் உடனே சமூக இயக்கங்கள்
முதல் மனித உரிமைக் கழகமான சுஹாகாம்வரை  வந்து நிற்கிறார்கள். அரசாங்க
அதிகாரிகள் முதல் மக்கள்வரை பலவகையிலும் எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன.
நாங்கள் என்னசெய்ய?" என்றார். "எப்படியோ 'சுடும் உண்மைகள்' வேலை செய்ய
ஆரம்பிக்கும்" என்றார்.

இந்த  'மக்கள் நிம்மதியாக இல்லை' என்ற செய்தி தொட்டும் நம் தலைவர்கள்
வாய் திறந்தார்களா? இதுபோன்ற சமுதாயத்திற்குத் தேவையான பலவற்றிற்கு
வாய் திறக்காத அவர்கள், 'பேராக் மாநிலத்தில் ம.இ.கா முக்கிய புள்ளி
ஒருவர் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ' பற்றிய செய்தி வந்தவுடன் அவரவர்
அறிக்கைவிடும் அறிக்கை மன்னர்களாகிவிட்டார்கள் என்பது மிகவும்
வேதனைகுரியதாக இருக்கிறது.  வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று
ஊரான்வீட்டு செய்தி என்றால் வாய்க்கு அவல் கிடைத்ததுபோல் பேசுகிறார்கள்,
எழுதுகிறார்கள். அவர்களை கண்டிக்கவேண்டும். அந்தச் செய்திதொட்டு
மறுப்பறிக்கைவிட்டு அப்படிப் பேசுவது தவறு என்று சொல்லும் பெரிய மற்றும்
குட்டித் தலைவர்களுக்கு நன்றிகூறும் அதேவேளை, இதுபோன்ற சமுதாய
நலனுக்கும் அக்கரை எடுத்து 'சுடும் உண்மைகள்' உரைக்கும் தகவல்களை
எடுத்துச்சென்று சம்பந்தப்பட்ட இலாகாக்கள், அதிகாரிகள் எனப் பார்த்துப் பேசி
தீர்வுகள் கண்டால் உத்தமம். அதுவே அனைவரின் விருப்பம்.

அன்புடன்,

பாலகோபாலன் நம்பியார்
கிள்ளான்.