Thursday, 26 July 2012

கடந்து வந்த பாதை... - 1

அந்தக் காலங்களில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிறுகதைத் திறனாய்வுகளில் மூவரின் சிறுகதைகள் திறனாய்வாளரால் இறுதி சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படும். அவற்றை வந்திருப்பவர்களில் மூவரிடம் வாசிக்கச் சொல்லி எல்லோரும் செவிமடுப்பார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், ' நான் வாசிக்கிறேன்' என்று முந்திரிக்கொட்டை போல் கேட்டு வாசிப்பவர்களில் பலர், 'எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான்' என்பதுபோல நல்ல சிறுகதையைக்கூட கெடுத்து குட்டிச் சுவராக்கும் கலையில் வல்லவராக இருப்பார்கள்.

அந்த நிலை இங்கு இருக்கக்கூடாது என்பதற்காகவே ஏற்பாட்டாளர்கள் மூவரை முன்கூட்டியே தேர்ந்தெடுத்து வைத்திருந்தனர். அந்த மூவரில் நானும் ஒருவன். இன்று சிங்கையின் பாலு மணிமாறன் அன்று மலேசியாவில் காப்பார் பட்டணத்தில் பொறியியலாளராக வேலை செய்துகொண்டே எழுத்துத் துறையிலும் தீவிரமாக இருந்தார். இங்கு அவர், 'அப்பாவிச் சோழன்' என்ற பெயரில் நிறைய சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வந்தார். அவருடைய சிறுகதையும், எழுத்தாளர் சைபீர் முகம்மது அவர்களில் சிறுகதையும் மற்றும் நினைவில் இல்லாத வேறொரு எழுத்தாளரின் சிறுகதையும் இறுதி சுற்றுக்குத் தேர்வு பெற்றன. அப்பாவிச் சோழனின் சிறுகதையை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

எனக்கு ஒலிபெருக்கிமுன் பேசும்போது நா' சற்று வரண்டுபோகும், அதை என் நண்பர் 'ஏடம்' நன்கு அறிந்து வைத்திருக்கிறார். அப்பாவிச் சோழனின் சிறுகதையை மிகவும் அழகாக வாசித்துக் கொண்டிருந்த நேரம் பார்த்து எனது ந' வரண்டுபோய்க் கொண்டிருந்ததை 'ஏடம்' பார்த்துவிட்டுச் சரியான நேரத்தில் ஒரு 'கிளாஸ்' தண்ணீரை 'ரோஸ்ட்ரம்' மீது கொண்டுவந்து வைத்தார். அந்தச் சமயம் பார்த்து நானும் அப்பாவிச் சோழனின் சிறுகதையில் வரும் ஒரு கதாபாத்திரம் "கோப்பையில் உள்ள மதுவைக் குடித்தார்" என்று இருந்ததை வாசித்துவிட்டு,  "நானும் குடித்தேன்" என்று நண்பர் 'ஏடம்' எனக்காக வைத்துச் சென்ற அந்த தண்ணீரை எடுத்துக் குடித்தேன். இதைக் கண்ணுற்ற அண்ணன் ஆதி குமணன், 'சபாஷ்' என்று பாராட்ட, வந்திருந்தோர் சிரிக்க ஒரே அல்லோல கல்லோலமாகிவிட்டது.
 

மூவரின் சிறுகதைகளும் வாசிக்கப் பட்டபின், கதைகள் மீதான விவாதங்கள், விமர்சனங்கள் என இறுதியில் எந்தச் சிறுகதை முதல் பரிசுக்குரியது என தீர்மாணிக்கப் பட்டது.  இதில் சை பீரின் சிறுகதை பற்றி விமர்சித்த கவிஞர் மறைந்த 'சாவி கலைச் செல்வன்' சரியாக விமர்சிக்கவில்லையென்று வரிந்து கட்டிக்கொண்டு பேசினார் சைபீர். "என்ன விமர்சனம் செய்கிறீர்கள், மண்ணாங்கட்டி விமர்சனம், மூளை இருக்கா?" என கூட்டத்தினர் முன் ஒருவரை பேசக்கூடாத வகையில் திட்டித் தீர்த்தார். கவிஞர் சாவி கலைச்செல்வன் கூனிக்குறுகி மௌனமானார். கூட்டத்தில் சிலர் முணுமுணுத்தனர்.

இல்லம் வந்த நான் உடனே மரியாதைக்குரிய சை பீர் அவர்களுக்கு கடுமையான ஒரு கடிதம் எழுதி நேராக அவர் இல்லத் தொலை நகலுக்கு அனுப்பி வைத்தேன்.

முறைப்படி என்னை அழைத்துக் கேட்க வேண்டியதை விட்டு விட்டு நிகழ்ச்சிக்கு வந்த முக்கியமான பலரிடம், " நான் என்ன பேசினேன்? அப்படியா முறைகேடாக பேசினேன்?" என்றெல்லாம் கேட்டு அவருக்கும் எனக்கும் மட்டும் உள்ள தொலை நகல் வழி அனுப்பப் பட்டக் கடிதத் தொடர்பை ஊருக்கே தெரிய வைத்து விட்டார். கடைசிவரை அதுதொட்டு அவர் என்னை அழைத்துக் கேட்கவே இல்லை. இதனால் எனக்குப் பலர் அழைத்து வாழ்த்துச் சொல்லி என் துணிச்சலைப் பாராட்டினர். அப்படி இருந்தாலும், சை பீர் அவர்கள் என்னை பார்க்கும் சமயம் முறைத்துக் கொண்டதில்லை. அது அவருடைய முதிர்ச்சியைக் காட்டியது. நன்றி ஐயா!

யார் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும், யார் யாரை வேண்டுமானாலும் ஏசட்டும், தூற்றட்டும், ஆனால் அவற்றில் அசிங்கத்தனமான வார்த்தைகள் இல்லாத வண்ணம் இருத்தல் அவசியம் என்று எழுத்தாள வாசக நண்பர்களுக்கு நான் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டும் என்றில்லை.

மீண்டும் கடந்து வந்த பாதை - 2 வழி சந்திக்கிறேன்.

2 comments:

  1. " நான் என்ன பேசினேன்? அப்படியா முறைகேடாக பேசினேன்?" என்றெல்லாம் கேட்டு அவருக்கும் எனக்கும் மட்டும் உள்ள தொலை நகல் வழி அனுப்பப் பட்டக் கடிதத் தொடர்பை ஊருக்கே தெரிய வைத்து விட்டார். /// இதே போன்ற ஒரு அனுபவம் எனக்கும் உண்டானது. செய்தி அனுப்பினேன் என்ற காரணத்தால் கிடைக்க வேண்டிய வேலையும் கிடைக்காது போனது.

    ReplyDelete
  2. சாதாரண மக்கள் முதல் படித்தவர்கள்வரை செய்யும் இதுபோன்ற இன்னும் பலவிதமான தவறுகளால் சங்கடங்கள்தான் மிச்சம்.

    ReplyDelete