Tuesday, 24 July 2012

"தாய்மொழி பள்ளிகளை மூடுவதா?"

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அவர்களுக்கு cerebellum என்று
சொல்லப்படும் சிறு மூளை, cerebrum என்னும் பெரு மூளை மற்றும்
medulla oblongata எனப்படும் முகுளம் போன்ற எல்லாவற்றிலும் நட்டு
தளர்ந்துவிட்டதுபோலும்; பேட்டிகளின் மூலமும், இணைய வலைப்-
பதிவுகளின் வழியும் தேவையற்ற செய்திகளைச்சொல்லி நாட்டு மக்களின்
ஒற்றுமைக்கு குழிதோண்டுகிறார். நாட்டின் பிரதமர் என்று ஒருவர் இருக்க,
இவர் அவரைவிட அதிகமாக ஊடகங்களுக்குத் தன்னை விளம்பரப்படுத்திக்
கொள்வதோடல்லாமல் பிரதமரின் குறிக்கோள் இலட்சியங்களுக்கு சாவுமணி
அடித்துக்கொண்டிருக்கிறார்.

இதைக்கண்டும், கேட்டும் முக்கியமான தேசிய முன்னணித் தலைவர்களில்
பலரும் மௌன விரதம் மேற்கொண்டிருக்கிறார்கள் எனில், மகாதீர்
சொல்லும் ஒவ்வொன்றிற்கும் ஆமாம் சாமி போட்டுக்கொண்டிருக்கிறார்களா
என்பதே வினா! வயதாகிவிட்டதால் ஏற்படும் பிதற்றல் எனவும் வெறுமனே
விட்டுவிடலாகாது. இந்தச் சர்வாதிகாரியால்தான் ஏற்கெனவே,நம் இந்திய
சமுதாயம் பலவற்றையும் கோட்டைவிட்டது. அரசாங்க இலாகாக்கள்
பலவற்றை தனியார் மயமாக்கும் திட்டத்தில் ( ஓர் உதாரணம் : டெலிகோம்)
இந்தியர்கள் ஒடுக்கப்பட்டனர். அவருடைய ஆட்சியில் எப்படியாவது தாய்மொழி
பள்ளிகளை மூடவேண்டும்என்பதற்காக பரிபாஷையில் திட்டம் போட்டார்.

அவருடைய பாச்சா பலிக்கவில்லை; எனவே, இந்தியர்கள் ஒற்றுமையாகவும்
கூட்டமாகவும் வாழும் தோட்டப்புறங்களில் கைவைத்தார். தோட்டப்புற
விஷயத்தை முன்பே எழுதிவிட்டேன். அதற்கும் ஒரு இந்தியத் தலைவர்(!?),
"நாம் சிறுபான்மையினர் என்பதால் எதையும் கேட்டுத்தான் பெறவேண்டும்"
என்று ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார். அப்படியாயின் தேசிய முன்னணியில்
ஒரு உறுப்புக் கட்சியாக இருந்து என்ன பயன்? நமக்குக் கொடுக்கவேண்டியதை
விகிதாச்சார அடிப்படியில் கொடுப்பதுதானே நியாயம்! இதுபோன்ற இந்தியத்
தலைவர்கள் அன்றுதொட்டு இன்றுவரை இருப்பதால்தான் மகாதீர் காலத்தில்
நாம் பலவற்றைச் சுலபமாக இழக்கநேரிட்டது. சால்ஜாப்புகள் பலவற்றை
சொல்லியே 'அம்னோ' இந்தியசமுதாயத்தை ஏமாற்றி வந்துள்ளது.
நம் தலைவர்கள் ஏதும் செய்யவில்லை என்று ஒட்டு மொத்தமாக குற்றம்
சாற்றவில்லை; அப்படிப்பதிவு செய்யவும் நான் விரும்பவில்லை.
நம்மவர்களில் சில நல்ல தலைவர்களும் இருந்தார்கள், இருக்கிறார்கள்.
மாறாக செய்ததைவிட, சாதித்ததைவிட, கோட்டைவிட்டதே அதிகம் என
சொல்ல வருகிறேன். சரித்திரத்திலும் கைவைத்து நமது பெருமைகளைக்
குழிதோண்டிப் புதைத்த பரிசான் அரசாங்கத்தின் மீது சக உறுப்புக்கட்சி என்ற
ரீதியில் அவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை; எடுத்திருந்தாலும்
கடைசிவரைப் போராடி அதற்குத்தீர்வு காணாமல் தோல்விகண்டனர்.
கடாரம் கண்ட ராஜராஜ சோழன் தொட்டு, மலாக்காவை கண்ட
'பரமேஸ்வரா'வை 'இஷ்கந்தர்ஷா' என பெயர்மாற்றம் செய்ததுமுதல்
பூஜாங் பள்ளத்தாக்கு பொக்கிஷங்கள்வரை இன்னும் அடுக்கிக்கொண்டே
போகும் அளவுக்கு நமது சரித்திரங்களை மறைத்து விட்டார்கள்,
மறைத்துக்கொண்டும் வருகிறார்கள். ஆட்சியில் இருந்த நம்மவர்கள் என்ன
செய்துகொண்டு இருந்தார்கள்? இருப்பவர்களாவது அதை மீட்டெடுப்பார்களா?
அல்லது 'சீட்'போய்விடுமே என மேலும் மௌனம் சாதிப்பார்களா?

இப்படியே இருப்பதனால்தான், இன்று பகிரங்கமாகவே, மகாதீர் அவர்கள்
தாய்மொழி பள்ளிகளை மூடிவிடுங்கள் என 'மிங்குவான் மலேசியா'விற்கு
பேட்டி கொடுத்திருக்கிறார். பிரதமர் டத்தோசிரி நஜீப் அவர்களும்,
துணைப்பிரதமரும், கல்வி அமைச்சருமான தான்சிரி மொகிதின் அவர்களும்,
மற்றவர்களும் எதையும் கூறாமல் அமைதி காக்கின்றனர் என்றால்,
"ஒரே மலேசியா" என்பது மலாய்ப்பள்ளிகள் மட்டும்தான் கடைசியில்
இருக்கவேண்டும் என்ற திட்டமா? இப்போது சொல்லிவரும் செய்துவரும்
அனைத்தும் கண்துடைப்பு வேலைகளா? பதின்மூன்றாவது பொதுத்தேர்தலில்
வென்றுவந்தால், 'பழையகுருடி கதவைத்திறடி' என்ற தன்மூப்பான ஆட்சிதான்
மீண்டும் ஏற்படுமா? தேர்தல் காய்ச்சலில் பாரிசான் இருக்கும்போதே, பிரதமர்
பகிரங்கமாகவே அறிவித்த அதிகப்படியான மெட்ரிகுலேஷன் இடங்களை
கொடுப்பதற்கும், நிரப்புவதற்கும் படாதபாடு படவேண்டியிருக்கிறது என்றால்
பிறகு என்ன நடக்கும் என்பதை சற்று சீர்தூக்கி பார்க்கவேண்டிய நிலையில்
நம் இந்தியத் தலைவர்கள் இருக்கிறார்களா?

சிறுபான்மை இனத்தின் கோரிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், ஏதோ
ஒரு நாட்டின் சிறுபான்மை இனத்தைச் சுட்டிக்காட்டி அவர்களைவிட நாம்
அதிகமாகவே இங்குள்ள வளங்களை எல்லாம் அனுபவித்து வருவதாகவும்
வயிற்றெரிச்சல் கொண்டு பேசியிருக்கிறார் பாதி இந்தியனான மகாதீர்.
இங்கு கூட்டங்களிலும் 'செராமா'க்களிலும் சிறுபான்மை இனங்களுடைய
சில சொற்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளதாம்; அதனால் தேசிய
மொழியின் நிலை கேள்விக்குறியாகிவிட்டதாம்! சர்வாதிகாரி மகாதீரின்
புதிய கண்டுபிடிப்பைப் பாருங்கள். அவருக்கு 'நோபல்' பரிசுக்கு சிபரிசு
செய்யவேண்டும்! அரசமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள
சலுகைகளுக்கு மேலாக மற்ற இனங்கள் கோரினால் மலாய்க்காரர்களும்
அவ்வாறு செய்யவேண்டுமாம். சற்றே யோசித்துப் பார்ப்போம்; அப்படி
என்னதான் கோரிக்கைகளை நாம் அதிகமாக வைத்துவிட்டோம்? உள்ளதைக்
கேட்கிறோம், இழந்ததைக் கேட்கிறோம், அவ்வளவே! அரசமைப்பில்
உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள சலுகைகளே நமக்குக் கிடைக்காமல்
இருக்கிறதே, இதற்கு மகாதீர் என்ன சொல்லப் போகிறார்? நம் இந்தியத்
தலைவர்களாவது இனி இது தொட்டு அவரிடமே கேட்கலாமே? மேலும்,
"சிறுபான்மையினர் மலாய் சலுகைகள் ரத்துசெய்யப்பட வேண்டும் என
விரும்பினால், அவர்கள் தங்கள் மொழியை பயன்படுத்துவதை நிறுத்திக்-
கொண்டு தாய்மொழிப்பள்ளிகளை மூடவேண்டும்" என்று சொல்லி
ஒற்றுமையாக இருக்கும் மூவினத்தையும் சீண்டிப்பார்க்க வைத்து சண்டை
மூட்டப் பார்க்கிறார். இவர்தான் நடப்பு அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு
எதிராக சொல்லியும், செய்தும் வருகிறார்.

சர்வாதிகாரி மகாதீர் சொல்லும் ஒவ்வொன்றும் பாரிசானுக்கு வீழ்ச்சியைத்தரும்
என்பதையாவது சிந்தித்துப் பார்க்கிறார்களா? இல்லை, அவர் சொல்வதுதான்
நஜீப் அரசாங்கத்தின் கொள்கை எனில், மகாதீர்தான் நடப்பு அரசாங்கத்தின்
கொரடா எனில், இந்திய சமுதாயமே, இனியும் ஏமாந்துவிடாமல்
விழிப்போடு இருங்கள். 


எனது இந்தக் கட்டுரை 11.7.2012 தினக் குரல் பத்திரிகையில் வந்தது

1 comment:

  1. தமிழகத்தில் மூடுகின்றார்கள்!!!!

    ReplyDelete