Thursday, 26 July 2012

கடந்து வந்த பாதையிலே... - 2

கடந்து வந்த பாதையிலே - 2

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தமிழர்களுக்கென்று கம்பீரமாக உயர்ந்து நிற்பது துன் சம்பந்தன் கட்டிடம் மட்டுமே! அதில், முன்னால் அமர்ந்திருப்பவர்களின் தலைகள் மறைக்காமல் மேடையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை சுமார் 300 பேர் சாய்ந்து அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் சிறப்பாக வடிவமைத்திருக்கிறது தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம். அங்கேயே மற்றொரு சிறிய மண்டபமும் உண்டு; அது சுமார் 100 பேர் அமரக்கூடிய சாதாரண மண்டபம். இரண்டும் குளிர் சாதன வசதியுடையது.

கோலாலம்பூரில் இருப்பவர்களுக்கும் சரி, மற்ற ஊர்களிலிருந்து வருபவர்களுக்கும் சரி, குறிப்பாக தமிழர்களுக்கு அந்த டான்ஸ்ரி டத்தோ கே.ஆர்.சோமா அரங்கம்தான் தங்களின் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உகந்த இடமாக அமைந்துவிட்டது. அதற்கு மற்றொரு காரணம், இடத்தைப் பயன்படுத்த விரும்புபவர்கள் நேராக நல்ல மனம் படைத்த டான்ஸ்ரி டத்தோ கே.ஆர். சோமசுந்தரம் அவர்களிடமோ அல்லது மற்றொரு நல்ல மனிதரான டத்தோ சகாதேவன் அவர்களிடமோ சென்று எப்படியாவது அந்த மண்டபத்தை வாடகை இல்லாமல் பெற்றுக்கொள்வார்கள். சில நேரங்களில் குறைந்த வாடகை கொடுத்துப் பெற்றுக் கொள்வார்கள். இந்த நல்ல காரியத்தை அந்த நிருவாகம் பல வருடங்களாகச் செய்து வருகிறது. அவர்களுக்கு நம் இந்திய சமுதாயம் குறிப்பாக நூல் வெளியீடுகள், இலக்கிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் இதர பல நிகழ்ச்சிகள் நடத்திவரும் தனியார் மற்றும் இயக்கங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளது.

அண்மையில் 11.6.2011 சனிக்கிழமை ஜொகூர், மாசாய், ஸ்ரி ஆலமைச் சேர்ந்த க.கோபால் அவர்களின் நூல் வெளியீடு சோமா அரங்கில் நடைபெற்றது. ஜொகூர் பிரமுகர், கொடை நெஞ்சர் டாக்டர் புருஷோத்தமன் அவர்களின் தலைமையில் கவிஞர் ப.ராமுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சுமார் 20 - 25 பேர் மட்டுமே வந்ததாக கோலாலம்பூர் சிலாங்கூர் எழுத்தாளர் வாசகர் இயக்கத் தலைவர் அம்பாங் சுப்ரா சொல்லி வருத்தப் பட்டார். அவர் அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டாராம்.

பொதுவாக, அவர் அப்படிச் செயல்பட்டால் 100 முதல் 150 ரிங்கிட்வரை கிடைக்குமாம். இந்த வெளியீட்டு விழாவில் முதலுக்கே மோசம் என்பதால் தனக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை என்று விசனப்பட்டுக் கொண்டார். அதோடு இந்த விழாவை ஏற்பாடு செய்வதன்வழி தனக்கும் ஏதாவது கிடைக்கும் என்ற நிலையில் இருந்த ப.ராமுவுக்கு பெருத்த ஏமாற்றம்தான் மிஞ்சியது. இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால், சுமார் 35 - 40 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் கிள்ளானிலிருந்து கோலாலம்பூர் சென்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் அதோடு தமிழ் வாழ்த்துப்பாட யாரும் வந்திருக்காவிட்டால் அதையும் பாடி கலகலப்பாக வழி நடத்துவதற்காகவே ஐம்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு தயார் நிலையில் வந்து நடத்திக் கொடுத்த எனக்கு யாரும் ஒரு ரிங்கிட் கூட தந்ததில்லையே! நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் நான் கேட்பதில்லை, அது என் குணம், அவர்களுக்காவது தெரிந்திருக்க வேண்டுமே! கார் என்ன தண்ணீரிலா ஓடுகிறது! கொடுத்து வைத்தவர் அம்பாங் சுப்ரா; உங்களுக்கு எங்கோ மச்சம் இருக்கிறது ஐயா! இனியும் நான் சும்மா இருக்கக் கூடாது, இப்பொழுது பணி ஓய்வு பெற்றுவிட்டதால் யார் அழைத்தாலும், "எனக்கும் ஏதாவது ஹீ.. ஹீ.. ஹீ.. பார்த்துக் கொடுங்க சார்ர்ர்.. ஹே.. ஹே.. ஹே.." என்று சூடு சொரணை இல்லாமல் இளித்துக்கொண்டு தலையை சொரிந்து கொள்ளவேண்டும். அப்படி உள்ளவர்களுக்குத்தான் இது காலம். காலமடி காலம் கலிகாலமடி காலம்.

அடுத்து, இங்கு அடிக்கடி மற்றவர்களின் நூல் வெளியீடுகளுக்குச் சென்று வாங்கி ஆதரிக்கும் நல்லுள்ளம் கொண்ட பல எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகளுக்கே கூவிக் கூவி அழைத்தாலும் வர மறுக்கிறார்களே! 'அவர் என்னுடைய பல நூல் வெளியீடுகளுக்கு வந்தவர், இவருடைய முதல் வெளியீட்டிற்கு நாம் நிச்சயம் செல்லவேண்டும் அல்லது குறைந்த பட்சம் எங்கேணும் பார்த்தாவது பெற்றுக் கொள்ளவேண்டும், அல்லது நூலை அனுப்பி வைக்கவும், வங்கிக் கணக்கில் பணத்தைப் போட்டுவிடுகிறேன்' என்ற அக்கரை கொஞ்சமாவது இருக்க வேண்டுமல்லவா இந்த மாபெரும்(?) 'அன்பு' எழுத்தாளர்களுக்கு!!!

இப்படி இருக்க, பொதுவாகவே இந்த வட்டாரத்தில் நடைபெறும் நூல் வெளியீடுகளுக்கு வராத க.கோபால் எந்த தைரியத்தில், யாருடைய சொல் கேட்டு இங்கு வந்து நூல் வெளியீடு செய்தார் என்பது ஆச்சரியத்தைத் தருகிறது.

கடந்து வந்த பாதையிலே... - 3 தொடரும்

No comments:

Post a Comment